;
Athirady Tamil News

திருட்டு வழக்கில் கோவை பெண் கேரளாவில் கைது – இரட்டை குழந்தைகளுடன் கணவர் பரிதவிப்பு..!!

0

கோவை மாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி ஜெயா (23). இவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் என்ற இடத்தில் தங்கி செப்டிங் டேங்க் கிளீன் செய்யும் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்குமே கார்த்திக் என்று பெயரிட்டனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் கமி‌ஷனர் ஒருவர் தனது வீட்டில் சில பொருட்கள் திருட்டுபோனதாக கோழிக்கோடு மருத்துவ கல்லூரி வளாக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓய்வு பெற்ற போலீஸ் கமி‌ஷனர் வீட்டில் திருடியது கோவையை சேர்ந்த ஜெயா என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், நேற்று இரட்டை குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தைகளை எடுத்துக் கொண்டு ஜெயாவும் அவரது கணவர் மணிகண்டனும் திரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஜெயாவை கைது செய்து போலீஸ் ஜீப்பில் அழைத்துச்சென்றனர்.

முன்னதாக ஒரு துண்டு சீட்டில் ஒரு செல்போன் எண்ணை எழுதி அவரது கணவர் மணிகண்டனிடம் கொடுத்து கோழிக்கோடு வந்து தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டு வேகமாக சென்றனர். என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியாமல் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இரட்டை குழந்தைகளை தூக்கிக்கொண்டு திரூரில் இருந்து கோழிக்கோட்டிற்கு ரெயிலில் புறப்பட்டார். கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இறங்கிய மணிகண்டன் செல்போன் எண் குறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்டார். ஆனால் யாரும் பதில் கூற முன் வரவில்லை.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு கதறி அழத்தொடங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அங்கு வந்தனர். அழுது கொண்டிருந்த மணிகண்டனிடம் விபரம் கேட்டனர். பின்னர் அவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் அதிகாரி ராஜன், இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் மற்றும் 2 குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு அறைக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு நடந்த விசாரணையில் மணிகண்டன் கொடுத்த செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அது கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய அதிகாரியின் செல்போன் என்பது தெரியவந்தது.

பால் குடிக்கும் 9 மாத கைக்குழந்தைகள் உள்ள போது குழந்தைகளை விட்டு விட்டு தாயை எப்படி கைது செய்யலாம் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். அவர்கள் முழு விளக்கம் தராமல் கைது செய்யப்பட்ட ஜெயா குந்தமங்கலம் கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம் என்று கூறினர்.

இதனையடுத்து கோழிக்கோடு குழந்தைகள் காப்பாக அரசு அதிகாரி மற்றும் கோழிக்கோடு சிட்டி மகளிர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்யப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர்களும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பால் குடிக்கும் குழந்தைகளை விட்டு விட்டு தாயை எப்படி கைது செய்யலாம்? என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர்.

இந்த விபரம் கேரளா முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. போலீசார் சட்டத்தை மீறி கோவை பெண்ணை கைது செய்துள்ளனர் என்று சமூக நல அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஓய்வு பெற்ற போலீஸ் கமி‌ஷனரை திருப்திபடுத்த போலீசார் அப்பாவி இளம்பெண்ணை கைது செய்துள்ளதாக ஜெயா வீட்டருகே வசிக்கும் பொதுமக்கள் கூறினர். போலீசார் தாங்கள் செய்த தவறை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறு இழைத்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 5 =

*