;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது? குழப்பத்தின் பின்னணியென்ன?? (படங்கள்)

0


முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது என்பதில் பல்கலைகழக மாணவர்களும், வடக்கு முதலமைச்சரும் மல்லுக்கட்டுவதை போல ஒரு தோற்றம் தெரிகிறதல்லவா?

இதை பார்ப்பவர்களிற்கு எரிச்சல் வரலாம். மரணித்தவர்களின் அஞ்சலி நிகழ்வை கூட ஒற்றுமையாக ஒழுங்குபடுத்த முடியாமல் உள்ளதேயென நீங்கள் சலிப்படையலாம். ஏன் இந்த ஒற்றுமையின்மை ஏற்பட்டதென தெரியுமா?

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்து பார்த்தால், இது சின்னத்தனமான சண்டையாக தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இதன் பின்னால் வெளியில் தெரியாத பெரியதொரு சிக்கலும், ஆபத்தும் உள்ளது.

இவ்வளவு குழப்பங்களிற்கும் காரணம், அவுஸ்திரேலியாவில் இருந்தும் இன்னும் சில நாடுகளிலிருந்தும் வரும் பணம்தான் காரணமென்றால் உங்களிற்கு நம்ப சிரமமாக இருக்கும்.

உண்மை அதுதான்..

யார் அஞ்சலி செலுத்துவதென்பதில் முதலமைச்சர் விடாப்பிடியாக நிற்பது, சிலருக்கு எரிச்சலாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சரின் விடாப்பிடியின் பின்னால் பெரியதொரு அரசியல் அணுகுமுறையே விரிந்துள்ளது.

இதை இப்படி சொன்னால்- “இவன் யாரடா, ஓவராக செம்படிக்கிறானே?“ என உங்களிற்கு தோன்றும். அனைத்தையும் விரிவாக சொல்லிவிடுகிறோம். மிகுதியை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

இவ்வளவு குழப்பங்களிற்கும் காரணம்- வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம்!

யார் அனுப்பியது? யாருக்கு அனுப்பியது?

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களிற்கு, வெளிநாட்டில் இயங்கும் அதிதீவிர நிலைப்பாடுடைய அமைப்பொன்று. அதன் பெயர் அவுஸ்திரேலியா- தலைமைசெயலகம்!

அதாவது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புக்கள் உருவாகி, ஆளுக்காள் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் கேட்டால், தம்மை தவிர மிகுதி அனைவரும் துரோகிகள் என்பார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகி, சுமந்திரனிற்கு மரணதண்டனை கொடுக்க வேண்டுமென்பார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடிக்கடி தடுமாறும்- நாம்தான் ஒரு மாதிரி இழுத்துபிடித்து வைத்திருக்கிறோம் என்பார்கள்.

அப்படியான அமைப்பொன்றே அவுஸ்திரேலிய தலைமை செயலகம்.

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக பல்கலைகழக மாணவர்களை கொம்பு சீவி, தமிழ் அரசியலில் இவர்கள் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள் தொடர்பான தகவல்களை தமிழ்பக்கம் நம்பகரமாக மூலங்களில் இருந்து திரட்டியுள்ளது. .

அவுஸ்திரேலியாவில் தலைமை செயலகத்தின் முக்கியஸ்தரான வசந்தன் மற்றும் அதே அமைப்பில் செயற்படும் நளின் (இலண்டன்) ஆகியோரே இந்த குழப்பங்களின் நேரடி சூத்திரதாரிகள்.

புலம்பெயர்ந்து சென்றாலும் தாயக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தாங்களே இருக்க வேண்டுமென இவர்கள் கருதி செயற்பட்டு வருகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பெருமளவு ஆதரிக்கும், கட்டுப்படுத்தும் அமைப்பினர் இவர்கள்.

வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அவுஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் சந்தித்து, தமது அரசியலிற்காக அவர்களை பாவிக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் தரப்பு இது.

யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி அனுப்பியவர்களும் இவர்களே. நினைவுத்தூபி அமைப்பதால் அரசு, சட்டத்துறையால் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வெளிநாட்டுக்கு அழைப்பதாகவும் இவர்கள் வாக்களித்தனர்.

இதன்பின்னரே பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நினைவுத்தூபி அமைக்கும் பணியில் இறங்கினர். அதாவது, நமது பல்கலைகழக மாணவர்கள் உணர்வுபூர்வமாக நினைவுத்தூபி அமைக்கவில்லை. வெளிநாட்டு பணத்தை பெற்று தூபி கட்டும் “ஒப்பந்தக்காரர்களாவே“ செயற்பட்டனர்.

நினைவுநிகழ்வை நடத்துவது தொடர்பாக பல்கலைகழக மாணவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சிக்கல்பட்டபோது, இந்த தரப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்தனர்.

அவர்களின் அழுத்தத்தை அடுத்தே- பல்கலைகழக மாணவர்களின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்தது.

பல்கலைகழக மாணவர்களை ஒப்பந்த கூலியாக அமர்த்தி முள்ளிவாய்க்கால் நினைவுநாளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் பின்னர், வடக்கு முதலமைச்சர் அதில் தலையை போட்டது அவர்களை சீண்டி விட்டது.

வடக்கு முதலமைச்சர் அரசியல்ரீதியாகவும் தமது கட்டுப்பாட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார் என்ற ஆத்திரமும் அவர்களிடம் இருந்தது. இதையெல்லாம் பாவித்து பல்கலைகழக மாணவர்களை ஒப்பந்தகூலிகளாக பாவித்து தமிழ் அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

புலம்பெயர் அமைப்புக்கள் பல இலங்கை புலனாய்வுதுறையின் கட்டுப்பாட்டில் செயற்படுகிறது. வடக்கு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அந்த அமைப்பின் மூலம் புலனாய்வுத்துறை காய்நகர்த்தவும் வாய்ப்புண்டு.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி கற்பதால் மாத்திரம் ஒருவர் அரசியல் செயற்பாட்டு தகுதியை பெற முடியாது. இந்த குழப்பங்களிற்கு பல்கலைகழக மாணவர்களே காரணம், அவர்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இருந்து ஒதுங்கி- மாகாணசபையுடன் இணைந்து செயற்பட வலியுறுத்துவதே தமிழர் அரசியலுக்கு நல்லது.

முக்கியமாக தாயக மக்களின் அரசியல் செயற்பாட்டை, தாயகத்திலேயே தீர்மானிக்கும் வல்லமையை ஏற்படுத்த வேண்டும்.

இம்முறை அதை நிரூபிக்க தவறினால், நிலையான எந்த அரசியல் நகர்வையும் தாயகத்தில் திட்டமிடவோ, மேற்கொள்ளவோ முடியாதபடி “கூலிக்கு ஆட்களை வைத்து“ வெளிநாட்டு சக்திகள் குழப்பங்களை ஏற்படுத்தும்.

அடுத்தடுத்த நாட்களில் பொதுஅமைப்புக்கள் என்ற பெயரில், இந்த அணியிடம் பணம்பெற்றுக்கொண்டு வடக்கின் ஏனைய இடங்களில் இயங்குபவர்கள் மூலம் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்களை வெளியிடவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − five =

*