;
Athirady Tamil News

காஷ்மீர் கல்வீச்சில் சென்னை சுற்றுலா பயணி பலி – நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கண்டனம்..!!

0

சென்னையை சேர்ந்த ஆர்.திருமணி (வயது 22) என்பவர் குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு குல்மார்க்கில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி ஒரு வாகனத்தில் சென்றபோது நர்பால் என்ற இடத்தில் கல்வீச்சாளர்கள் அந்த வாகனத்தின் மீது கற்களை வீசியதில் திருமணியின் தலை மற்றும் சில இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட திருமணி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

சென்னை சுற்றுலா பயணி கல் வீச்சாளர்களால் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் கவனக்குறைவால் நடந்ததா? அல்லது தெரிந்தே நடந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இது கடும் கண்டனத்துக்குரியது.

மாநில முதல்-மந்திரி காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அதுதான் காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கு உதவியாக இருக்கும். கல்வீச்சு சம்பவம் மூலம் ஒரு சுற்றுலா பயணியை காயப்படுத்துவதும், கொல்வதும் தான் உங்கள் விருப்பமா? இது நிச்சயமாக அதற்கு உகந்ததாக இருக்காது.

பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக ஆயுதப்படைகள் மீது அனைத்து பொறுப்புகளையும் திணிக்கக்கூடாது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெஹபூபா முப்தி கொலை செய்யப்பட்ட திருமணியின் தந்தையை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் வருத்தத்துடன் கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை கேட்கப்படாத, மனிதநேயம் கொல்லப்படுவதை நாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனது தலை அவமானத்தால் தாழ்ந்துவிட்டது. நாம் அடுத்த தலைமுறைக்கு எந்த மாதிரியான கல்வியை அளித்திருக்கிறோம் என நினைக்கும்போது எனக்குள் உள்ள தாய்மை அச்சமடைகிறது.

நாம் நம்முடைய குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தருகிறோம்? கற்களை எடுத்து ரோட்டில் யார் சென்றாலும் அடித்துக் கொல்ல வேண்டுமென்றா? இதை நமது மதம் இஸ்லாம் போதிக்கவில்லையே. நமது மதம் விருந்தினர்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தான் கற்றுத்தந்திருக்கிறது.

ஒரு ஏழை தந்தை குடும்பத்துடன் காஷ்மீர் வருவதற்காக தனது சேமிப்பு முழுவதையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் இப்போது தனது மகனின் சவப்பெட்டியுடன் திரும்பிச் செல்கிறார். இதைத்தானா நாம் விரும்புகிறோம்?

சுற்றுலா பற்றி நான் பேசவில்லை. இது மனிதநேயம் பற்றிய அடிப்படை கேள்வி. இது காஷ்மீரியம் அல்ல. இதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்.

இவ்வாறு மெஹபூபா முக்தி கூறினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறுகையில், “ஒரு சுற்றுலா பயணியை, நமது விருந்தினரை கல்வீசி கொன்றிருக்கிறோம் என்ற கல்வீச்சாளர்களையும், அவர்களின் நடவடிக்கையையும் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைய முடியுமா? சென்னையில் இருந்து வந்த இளைஞர் எனது தொகுதியில் இறந்திருக்கிறார். இதற்காக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த குண்டர்களையும், அவர்களது செயல்கள், கொள்கைகளையும் ஆதரிக்கமாட்டேன்” என்றார்.

காஷ்மீரின் 3 பிரிவினைவாத இயக்கங்கள் சேர்ந்த கூட்டமைப்பும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் நமது விருந்தினர்கள். நமது காஷ்மீரிய மற்றும் மத பாரம்பரியப்படி நாம் அவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களை தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. #Kashmirprevailingsituation #TNTourist #Thirumani #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − nine =

*