டிரம்ப்பின் முடிவால் ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு கிடுகிடு சரிவு..!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்டது.
இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்தது.
இந்நிலையில், நேற்றுவரை ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரான் நாணயத்தின் மதிப்பு 65 ஆயிரம் ரியால்களாக இருந்தது. ஆனால், இன்று 75 ஆயிரம் ரியால்களாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அன்னியச் செலாவணி கள்ளச்சந்தையில் ஒரு டாலர் இன்று 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனதாக ஒரு தரகர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் தனக்கு சொந்தமான ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை விற்ற ஈரான் நாட்டுக்காரர் ஒருவர், தனது முதலீட்டை பெருக்கும் நோக்கத்தில் தனக்கு சேர வேண்டிய பணத்தை அதிக விலைதந்து அமெரிக்க டாலர்களாக வாங்கி குவித்துள்ளதாக அந்த இடைத்தரகர் தெரிவித்தார்.
இதேநிலை நீடித்தால் வெகு குறுகிய காலத்தில் ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான நேசநாடுகள் விதிக்கவுள்ள தடைகளால் ஈரான் நாட்டு பணமதிப்பு மிகவும் வலுவிழப்பதுடன், கடுமையான பொருளாதார சிக்கலுக்கு ஈரான் இலக்காக நேரிடும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். #IranRialPlunges