;
Athirady Tamil News

ஆசையாக கொடுத்த சாக்லேட்.. உயிரைப் பறித்த அன்பு.. பாட்டி கொலையில் பயங்கரம்.. 23 பேர் கைது..!! (வீடியோ)

0

குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய ‘பாவத்திற்காக’ போளூர் அருகே அடித்து கொலை செய்யப்பட்டார் சென்னையை சேர்ந்த மூதாட்டி. அவரது குடும்பத்தாரும் அடித்து நொறுக்கப்பட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் மோகன் குமார் (43), சந்திரசேகர்(37). தற்போது மலேசியாவில் வசிக்கும் இந்த இருவர் மற்றும் ருக்மணி(65) உள்ளிட்ட 5 பேர் தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

வழி கேட்டார்

அங்கு அந்திமூர் என்ற கிராமம் அருகே கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் சாலையை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ஆசையாக தன்னிடமிருந்த சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார் ருக்மணி.

தப்பான எண்ணம்

இதனை பார்த்த கிராமத்து மக்கள் சிலர், காரில் வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து கிராம மக்களில் சிலர் மூதாட்டி ருக்மணியையும், அவருடன் வந்த 4 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். காரில் விரைந்து ஏறி தப்பி சென்றபோதும், பக்கத்து ஊர்க்காரர்களுக்கு போன் செய்து அங்கேயே காரை மறித்து மீண்டும் அடித்து உதைத்துள்ளனர்.

பலியான மூதாட்டி

தாக்குதலில் படுகாயமடைந்த ருக்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் வந்தவர்களில் சிலரின் ஆடைகளை அவிழ்த்தெறிந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை வாட்ஸ்அப்பில் வீடியோவாக எடுத்து தாங்கள் ஏதோ சாதனை செய்துவிட்டதை போல உலவ விட்டுள்ளனர்.

உதவி குணம்

அப்பாவி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தில் ருக்மணி வீட்டுக்கு அருகே வசிப்பவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் மிகுந்த உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். எனவேதான் குழந்தைகளை பார்த்து ஆசையாக சாக்லேட் கொடுத்திருப்பார். ஆனால், முட்டாள்தனமாக நடந்து கொண்ட கும்பல், இப்போது ருக்மணி குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என ஆதங்கத்தோடு கேட்கிறார்கள்.

ஊரை காலி செய்யும் மக்கள்

மூதாட்டியை அடித்து கொன்றதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. வாட்ஸ்அப் வீடியோ ஆதாரத்தை வைத்து வரிசையாக கைது நடவடிக்கையை எடுத்து வருகிறது காவல்துறை.அத்திமூர், தம்புகொட்டன்பாறை,கலையம் கிராமங்களை சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவிதத்தனர். எஸ்.பி. பொன்னி தலைமையில் 7 குழுக்களாக 100 காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ஊரைவிட்டு கிராம மக்கள் காலி செய்து வருகின்றனர். சட்டத்தை கையில் எடுக்க கூடாது. வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப கூடாது என எஸ்.பி. பொன்னி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*