;
Athirady Tamil News

லண்டனிலிருந்து காணாமல் போன சிட்டுக்குருவிகள்: வெளியான காரணம்..!!

0

ஒரு காலத்தில் லண்டனில் எங்கும் பறந்து திரிந்த சிட்டுக்குருவிகள் 25 ஆண்டுகளுக்குமுன் காணாமல்போயின.

திடீரென சிட்டுக்குருவிகள் மறைந்ததன் காரணம் நீண்ட காலமாக புரியாமலே இருந்தது. தற்போது அவை மாயமாகிப்போனதன் அதிர்ச்சிக் காரணம் ஒன்றை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

காற்று மாசு அதிலும் குறிப்பாக டீஸல் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை எப்படிமனிதர்களுக்கு கடும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதேபோல அதே புகைதான் சிட்டுக்குருவிகளையும் காணாமல் போகச் செய்திருக்க வேண்டும் என்னும் கருத்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது

1980களில் பல நாடுகளும் ஆர்வமுடன் வரவேற்ற, பெட்ரோல் வாகனங்களைவிட குறைவான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் டீசல் வாகனங்களை பிரித்தானியா புதிதாக அறிமுகப்படுத்தியது.

90களின் ஆரம்பத்தில் ஏராளமான வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அதே நேரத்தில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

சிட்டுக்குருவிகள் பல பாதகமான சூழ்நிலைகளையும் தாங்கிக் கொண்டு வளரும் பறவைகள். ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, ஆகிய கண்டங்களில் அதிகம் காணப்படும் சிட்டுக்குருவிகள் பின்னர் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டன

பனி உறைந்த அண்டார்டிகாவில் மட்டுமே சிட்டுக்குருவிகள் இல்லை. இமயமலையின் 14,000 அடி உயரத்திலானாலும் சரி, Frickley சுரங்கத்தின் 2000 அடி ஆழத்திலானாலும் சரி அவற்றால் இனப்பெருக்கம் செய்ய இயலும். அப்படிப்பட்ட எதையும் தாங்கி வாழும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 20 ஆம் நூற்றாண்டில் குறைய ஆரம்பித்தது.

1925 ஆம் ஆண்டு Max Nicholson என்னும் பறவையியலாளர் தனது சகோதருடன் சேர்ந்து Kensington Gardens என்னும் லண்டனின் பசுமையான பூங்காவிலுள்ள சிட்டுக்குருவிகளை எண்ண ஆரம்பித்தார்.

அப்போது அந்த பூங்காவில் 2,603 சிட்டுக்குருவிகள் இருந்தன.சில வருடங்களுக்குப்பின் மீண்டும் அதே பூங்காவிற்கு திரும்பிய அவர் மீண்டும் எண்ண ஆரம்பித்தார்.

1948 ஆம் ஆண்டு அங்கே 885 சிட்டுக்குருவிகள் இருந்தன. பின்னர் 1966இல் எண்ணியபோது 642ம், 1975இல் 544ம், 1995இல் 46ம் இருந்தன

சிட்டுக்குருவிகளை எண்ணத்தொடங்கி 75 ஆண்டுகளுக்குப்பின் 2000ஆவது ஆண்டு தனது 90 வயதில் Nicholson தனது உதவியாளர்களுடன் அதே பூங்காவில் கடைசியாக சிட்டுக்குருவிகளை எண்ணியபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ஆம் அங்கு வெறும் 8 சிட்டுக்குருவிகள் மட்டுமே இருந்தன. லண்டனில் காணப்பட்டதுபோலவே பிரித்தானியாவின் பிற நகரங்களிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து போனது தெரிய வந்தது.

அதே நேரத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை 1985க்கும் 1990க்கும் இடையே இரட்டிப்பாக ஆரம்பித்தது, அதாவது 64,000திலிருந்து 128,000ஆக உயர்ந்தது.பின்னர் 1992இல் 200,000ஆகவும் 1993இல் 340,000ஆகவும் 1994இல் 431,000 ஆகவும் டீஸல் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

வேறு வகையில் சொல்லப்போனால் லண்டனில் டீசல் துகள்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

டீசல் புகையால் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்னும் உண்மையை இன்று நாம் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் டீசல் புகையின் தீமையை நாமுமல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*