;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: அடம்பிடித்த பல்கலைக்கழக மாணவர்கள், அதிரடி காட்டிய முதலமைச்சர்.. (படங்கள் & வீடியோ)

0


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: அடம்பிடித்த பல்கலைக்கழக மாணவர்கள், அதிரடி காட்டிய முதலமைச்சர்..

முதலமைச்சருக்கும் யாழ் பல்கலைகழக மாணவர்களிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில், இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த மாணவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலையில் நடந்த கலந்துரையாடலில் முதலமைச்சரும், நினைவேந்தலை ஒழுங்கமைக்க மாகாணசபையினால் ஏற்படுத்தப்பட்ட குழுவை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.மாணவர்கள், மற்றும் அவர்களோடு சேர்ந்தியங்கும் குழுக்களும், நபர்களும் மறு தரப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நினைவேந்தலை தலைமை தாங்கும் பொறுப்பை தம்மிடமே தர வேண்டுமென மாணவர்களும், அவர்கள் சார்பான குழுக்களும் ஆரம்பத்திலிருந்தே அடம்பிடித்தனர். எனினும், இதை நிராகரித்த முதலமைச்சர்- மாகாணசபை அதை ஒழுங்கமைப்பதாக அறிவித்து, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளதால், இனி மாற்றம் செய்ய முடியாதென கூறினார்.

நிகழ்வு எப்படி நடக்க வேண்டுமென்பது குறித்த பெரிய திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக மாணவர்கள் தெரிவித்து, தலைமைதாங்குவதில் குறியாக இருந்தார்கள். வடமாகாணசபை தரப்பு அதற்கு சம்மதிக்காத நிலையில், நிகழ்வு எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்த தமது திட்ட வரைபை கையளித்து, அதன்படியே நிகழ்வு நடக்க வேண்டுமென மாணவர் தரப்பு வற்புறுத்தினர்.

மாகாணசபை நியமித்த குழு ஒரு வரைபை தயாரித்துள்ளதால், இந்த வரைபையும் அவர்களிடம் கொடுத்து, மாணவர்களின் வரைபிலுள்ள பொருத்தமான திட்டங்களை மாகாணசபையின் வரைபில் இணைப்பதாக கூறப்பட்டது. மாகாணசபை குழுவின்கூட்டம் நாளை நடக்கவுள்ளது.

பொதுச்சுடரை முதலமைச்சர் ஏந்தி, பாதிக்கப்பட்ட ஒரு தாயாரிடம் வழங்கலாமென மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு- யார் ஏற்றுவது என்பது, யார் தலைமை தாங்குவது என்பதில் மாகாணசபை அக்கறைப்படவில்லை, நிகழ்வை சரியாக நடத்துவது மட்டுமே தமது குறி, இதை பின்னர் தீர்மானிக்கலாமென முதலமைச்சரும், மாகாணசபை குழுவினரும் குறிப்பிட்டனர்.

யாழில் ஆட்களை திரட்டி, 3000 பேர் கொண்ட பிரமாண்ட பேரணியொன்றை முள்ளிவாய்க்காலிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதால், மாகாணசபை தீர்மானித்த 10.00 மணியென்ற நேரத்தை மாற்றும்படி மாணவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை மாகாணசபை தரப்பில் ஏற்றுக்கொண்டு 12.30 மணிக்கு நிகழ்வை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமது தரப்பின் நிலைப்பாட்டில் விட்டுக்கொடுத்ததாக காண்பிக்ககூடாதென்பதில் மாணவர்கள் அதிக அக்கறையெடுத்ததை அவதானிக்க முடிந்தது. நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசும்போது, பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவே கூற வேண்டுமென மாணவர் தரப்பில் கோரப்பட்டது. இதை மாகாணசபை தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் முடிவில், முல்லைத்தீவு உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களிடம் பேசும்போது “பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து நினைவேந்தலை நடத்த தீர்மானித்துள்ளோம்“ என அறிவித்தார்.

முன்னதாக… இந்த சந்திப்பில் முதலமைச்சர் மட்டுமே கலந்துகொள்வதாக இருந்தது. எனினும், மாணவர்களை முதலமைச்சர் தனியாக சந்திப்பது, நல்ல நகர்வாக இருக்காது, மாணவர் தரப்பை கையாள மாகாணசபை குழுவுடன் கலந்து கொள்வதே சிறந்தது என முதலமைச்சரின் ஆலோசகர்கள் இன்று காலையில் ஆலோசனை வழங்கியிருந்தனர். இதையடுத்து, மதியம் அளவில்தான் மாகாணசபை உறுப்பினர்களிற்கு தகவல் வழங்கப்பட்டது.

*** தொடர்புபட்ட செய்திகளுக்கு….

“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்? – கருணாகரன் (கட்டுரை)

“முள்ளிவாய்க்கால் நிகழ்வினை, ஒற்றுமையாக நடத்துங்கள்” -விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் “கண்ணீர்” வேண்டுகோள்..! (வீடியோ)

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு: குழப்பத்தின் உச்சத்தில் அனைத்து தரப்பும்.. யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இயக்குவது யார்?? (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவுநாளை யார் ஒழுங்குபடுத்துவது? குழப்பத்தின் பின்னணியென்ன?? (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*