;
Athirady Tamil News

யாழில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்..!! (வீடியோ & படங்கள்)

0

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (16) முற்பகல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றுபட்டு இந்த மாதம்-08 ஆம் திகதி கொழும்பில் நடாத்திய தொழில் உரிமைப் போராட்டத்தின் மீது மேற்கொண்ட நீர்த்தாரைப் பிரயோகத்திற்கெதிராகவும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

முற்பகல்- 10.30 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலாமாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல எண்ணிக்கையான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் “கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்குத் தண்ணீர் வீச்சு எதற்கு?”, “உரிமையைக் கேட்டால் தண்ணீ தாக்குதலா…?”, “பட்டதாரிகள் தெருவில் நின்றால் நாடு முன்னேறுவது எப்படி?”, ” போலிச் சான்றிதழ்களை நம்பிப் புள்ளிகளைப் போடாதே!”, ” பட்டதாரிகள் தகுதியற்றவர்களா! எதற்கு இந்தப் புள்ளித் திட்டம்?”, கெளரவப் பிரதமரே…!”,

“யாழ். வருகையின் போது தந்த வாக்குறுதிகள் எங்கே…!,”, “தேர்தலுக்கு முன் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்கு”, ” அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலைக்கு முதுமாணிப் பட்டம் எதற்கு?”, “2012-2017 வேலை கொடு”, ” 35 + வயதெல்லையை உயர்த்து”, தொழில் வாய்ப்பு 60 000 பட்டதாரிகள் 57000″, “முன்னைய பட்டதாரி நியமனங்கள் போன்று இம்முறையும் வழங்கப்படல் வேண்டும்!” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மேற்படி சுலோகங்கள் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன.

இதேவேளை, கொழும்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது நீர்த் தாரைப் பிரயோகம் இடம்பெற்றமையைக் கண்டித்து இன்றைய தினம் நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் ஒரேநாளில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*