எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையின் இந்திய உயர் அதிகாரி சுட்டுக்கொலை..!!

நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
அடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது