;
Athirady Tamil News

ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும்; பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)

0

ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும்; பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)

”புலிகள்  இயக்கத்தினருடன் பேச்சு நடத்த தயார். வடக்கு-கிழக்கு மாகாணசபை அதிகாரங்களை புலிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்   செயலாளர் நாயகமட் க. பத்மநாபா அறிவிப்பு.

மேற்கண்ட செய்தியை இந்திய வானொலி தொிவித்தது. இலண்டனில் உள்ள புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் பேச்சு நடத்த தமது பிரதிநிதி ஒருவரையும் அனுப்பப்போவதாக பத்மநாபா கூறியுள்ளார் என்று அச் செயதியில் தொிவிக்கப்பட்டது.

SG ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144) SGஇத் தகவலை  ஈ.பி.ஆர்.எல்.எஃப்  இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ”செய்திகள்” என்ற  பத்திரிகையும் வெளியிட்டிருந்தது.

1989ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புலிகள் சார்பாக சுயேட்சைக் குழுவினருக்கு மாபெரும் வெற்றிகிடைத்த பின்னரே பத்மநாபா அவ்வாறு கூறியிருந்தார்.

உண்மையில் புலிகளோடு பேச்சு நடத்த எவ்வாறான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை . தாம் பேச்சுக்கு தயாரானவர்கள், புலிகள்தான் பேச்சுக்கு வருகிநார்கள் இல்லை என்று மக்களை நம்பவைக்கும் அரசியல் தந்திரம்தான் அது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க தலைமை அலுவலகத்தில் புலிகள்   இயக்க உறுப்பினர்கள் சிலர் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணம் (ஃபைல்) ஒன்று இருந்தது.

ஓடிப்போனவர்கள் என்று குறிப்பிட்டதுகூட பொருத்தமாப்படவில்லை. அதனால் ஓடிப்போனவர்கள் என்பதில் ப் என்ற எழுத்தை வெட்டிவிட்டு யே எழுத்தைச் சேர்த்தனர். ஓடியே போனவர்கள் என்றாகியது.

புலிகள் இயக்கத்தினர் இனிமேல் திரும்பிவரவே போவதில்லை, தலையெடுக்கவும் போவதில்லை என்று ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினர் எந்தளவுக்கு நம்பினார்கள் என்பதுற்கு அது ஒரு உதாரணம்.

பத்திரிகைத் தடை

யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது மூன்று பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. முரசொலி, உதயன், ஈழநாடு.

ஈழநாடு பத்திரிகை அலுவலகம் முதலில் இலங்கைப் பொலிசாரால் தாக்கப்பட்டது. அதன் பின்னர் புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டது.

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும், அச்சியந்திரமும் புலிகளால் தாக்கப்பட்டதை ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரும் கடுமையாகக் கண்டித்தனர்.

இரண்டு முறை அழிவுகளைச் சந்தித்த பின்னரும் எரிந்த சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல ஈழநாடு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்க அத்துமீறல்களை யாழ் பத்திகைகள் ஓரளவு வெளியிட்டு வந்தன. ஈரோஸ் சுயேட்சைக் குழுவினரின் செய்திகளையும் வெளியிட்டு வந்தன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வந்த பத்திரிகைகள் மீது ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தின் கோபப் பார்வை திரும்பியது.

பல பெயர்களில் ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினர் பத்திரிகைகள் வெளியிட்டனர். அவ்வாறு வெளியிட்டும்கூட திருப்தி ஏற்படவில்லை.

தமக்கு எதிரான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஈழநாடு பத்திரிகைக்கு எச்சரிக்கை விடுத்தது ஈ.பி.ஆர். எல். எஃப்.

எச்சரிக்கை பயன் அளிக்கவில்லை. யாழ் குடாநாட்டில் இருந்து எந்தவொரு பத்திரிகையும் வெளிவரக்கூடாது.

தமது பத்திரிகை மட்டுமே வெளிவரவேண்டும் தமது பத்திரிகை மூலம் தாம் கொடுக்கும் செய்திகளை மட்டும் மக்கள் அறிந்தால் போதும் என்று முடியுக்கு வந்தனர்.

ஈழநாடு பத்திகைக் காரியாலத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர் ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினர். புத்திரிகை அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களைக் கடத்திக்கொண்டு போனார்கள். அலுவலகம் அடித்து மூடப்பட்டது.

முரசொலி, உதயன் அலுவலங்களும் மூடப்பட்டன. மூன்று பத்திரிகைகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டு விடுதலை என்ற பெயரில் தமது பத்திரிகையை வெளியிட்டனர்.

மூடப்பட்ட பத்திரிகைக் காரியாலயங்களில் இருந்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட ஊழியர்களை வைத்து தமது பத்திரிகையை வெளியிட்டனர்.

ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர் விடுதலை அப் பத்திரிகைக்கான அச்சுக்கோர்ப்புப் பணி துப்பாக்கி முனையில் நடத்தப்பட்டதுதான் வேடிக்கை இரண்டு வாரங்கள்வரை கடத்திச் செல்லப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்.

பத்திரிகைகளை தடை செய்ததையும், பத்திரிகைகளில் பணியாற்றியவர்கள் கடத்திச் செல்லப்பட்டதையும் கண்டித்து எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின.

இந்தியப் படையினரிடமும் முறையிடப்பட்டது. புரவலான எதிர்ப்புகள் தோன்றியதால் ஈ.பி.ஆர். எல். எஃப். பின்வாங்கியது. கடத்திச் சென்றவர்களை விடுதலை செய்தனர். புத்திரிகைக் காரிலயங்களுக்கு பின்னா இந்தியப் படையினர் பாதுகாப்பளித்தனர்.

முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தை தேடித்திரிந்தனர் ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினர். அவரது வீட்டுக்கு தேடிப்போனபோது திருச்செல்வம் அங்கிருக்கவில்லை. அவரது மகனான அகிலன் தான் வீட்டில் இருந்தார்.

19 வயதான அகிலன் ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சேன் ஜோன்ஸ் கல்லுரி மாணவனான அகிலன் கல்விப் புலமையில் முதல்தர மாணவனாக விளங்கியவர். ஆகிலன் கொலை தொடர்பாக இத் தொடரில் முன்னரே விபரிக்கப்பட்டுள்ளது.

தாக்குப் பிடிக்குமா?

imageproxy.php ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144) imageproxyவடக்கு-கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களில் ஒருவராக ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரால் நியமிக்கப்பட்டவர் தயான் ஜெயத்திலக,. லங்கா கார்டியன் சஞ்சிகை மேர்வின் டி.சில்வாவின் மகன்தான் தயான் ஜெயத்திலக.

வடக்கு-கிழக்கு இணைப்பு நிரந்தரமாக்கப்பட்டால் நாட்டின் ஒற்றுமைக்கு கேடுவிளையும் என்று கூறிவிட்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்.

ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டமையும் அவர் ராஜினாமா செய்ய ஒரு காரணமாக அமைந்தது.

அவர் ராஜினாமா செய்த பின்னர் ஜோ செனிவிரத்ன என்பவரை அமைச்சராக நியமித்தது ஈ.பி.ஆர். எல். எஃப்.

அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து ரசியப் படைகள் வாபசாகிக் கொண்டிருந்தன. ருசியப் படைகள் வாபசானதும், லசியாவை நம்பியிருந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியது. கிளர்ச்சியாளரின் தாக்குதல்கள் மேலோங்கின.

ஆதனை சுட்டிக்காட்டிய ஒரு நிருபர் ஜோ செனிவிரத்னவிடம் பின்வருமாறு கேட்டிருந்தார். ருசியப் படைகள் வாபசானதும் ஆப்கானிஸ்தான் அரசு ஆட்டம் காண்பது போல, இந்தியப்படைகள் வாபசானால் வடக்கு-கிழக்கு மாகாணசபையும் ஆட்டம் காணுமா?

அதற்கு ஜோ செனிவிரத்ன சொன்ன பதில்: ஆப்கான் அரசாங்கம் தனது எதிரிகளை எதிர்த்துப் போராட தன்னைத் தயார் செய்து கொள்ளவில்லை. வடக்கு-கிழக்கு மாகாணசபை எதிர்ப்புக்களை முறியடிக்கக்கூடிய பலத்தில் இருக்கிறது. இந்தியப் படை வெளியேறினாலும் வடக்கு-கிழக்கு மாகாணசபை தொடர்ந்து தாக்குப்பிடிக்கும்.

தற்போது ஜோ செனிவிரத்ன வெண்தாமரை இயக்க முக்கிஸ்தர்களில் ஒருவராக இருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதியே வெளியேறச் சொன்ன பின்னர் தாம் தொடர்ந்து நிலை கொண்டிருப்பது சாத்தியம் இல்லை என்பது இந்தியப் படையினருக்கும் நன்கு தெரிந்துவிட்டது.

ஆதனால் தாம் வெளியேறிய பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணசபை புலிகளின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக பலம் பெறவேண்டும், அதற்குரிய வழிவகைகளைச் செய்து கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என நினைத்தனர்.

ஈ.பி.ஆர். எல். எஃப். தலைமையில் ஈ.என்.டி.எல்.எஃப்., ரெலோ இயக்க உறுப்பினர்களையும் சேர்த்து தமிழ் தேசிய இராணுவத்தை பலமாக கட்டியமைத்துவிட்டு செல்லலாம் என்று எண்ணினார்கள்.

eprlf-696x492 ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144) eprlfகட்டாயப் பயிற்சி

தமிழ் தேசிய இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்புக்கள் தொடர்ந்து நடந்தன. பலவந்தமாக பிடித்து வரப்பட்டவர்களை பலத்த காவலுடன் பயிற்சி முகாம்களில் அடைத்து வைத்திருந்தனர்.

1989ல் கட்டாய ஆட்சேர்ப்பின்போது ; ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் என்.பிரபாகரன். அவர் தனது அனுபவத்தை கூறுகிறார்.

அப்போது எனக்கு 15 வயது. நானும் எனது நண்பனும் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் வைத்து ; ஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரால் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டோம். நாம் இருவரும் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும்போதுதான் இச் சம்பவம் நடைபெற்றது.

அந்த வேனில் ஏற்கனவே பிடிபட்ட சிலரும் இருந்தனர். நூங்கள் அசோகா ஹோட்டல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு ஏற்கனவே பிடிபட்டிருந்த பலருடன் நாங்களும் அடைக்கப்பட்டோம்.

நாம் அடைக்கப்பட்ட கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு நடக்கும் சித்ரவதையால் அவர்கள் அலறும் சத்தம் எமக்கு கேட்பதுண்டு. அதனால் நாங்களும் பயந்துபோய் இருந்தோம். என்னுடன் 80 பேர்வரை இருந்தனர்.

நாளுக்கு நாள் இத்தொகை அதிகமானது. அதில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். உயர்மட்ட உறுப்பினர்களுக்கு தெரிந்தவர்களின் பிள்ளைகளே அவ்வாறு விடுவிக்கப்பட்டனர். வேறு சிலர் பணம் கொடுத்தும் விடுவிக்கப்பட்டனர்.

சில நாட்களின் பின்னர் வேலணையில் இருந்த பயிற்சி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

அங்கு ஏற்கனவே பலநூறுபேர் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் கொண்டு செல்லப்பட்ட அன்றே எங்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமைவிட்டு யாராவது தப்ப முயற்சித்தால் வெடிதான். நாலுபக்கமும் எல்.எம்.ஜி. சென்ரிதான் யாரும் தப்பமுடியாது. என்று எச்சரிக்கப்பட்டோம்.

எங்கள் எல்லோருக்கும் ரன்னிங் சோட்ஸ்சும் பெனியனும் வழங்கப்பட்டது. சக உறுப்பினர்களை தோழர் என்றே அழைக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு.

காலை 4 மணிக்கு விசில் ஊதப்படும் உடனே எழும்பி வரிசையாக அணிவகுக்க வேண்டும். பயிற்சி முகாமை பத்துமுறை சுற்றி ஓடவேண்டும்.

மூன்றுமுறை சுற்றிவரும்போதே நானும் வேறு சிலரும் களைப்பினால் விழுந்தோம். ஒருமுறை சுற்றும் தூரம் ஒரு மைல் இருக்கும்.

நாம் விழுந்தவுடன் பூவரசம் கம்பினால் அடி விழுந்தது. எழுந்து ஓடினோம். அன்று எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியவில்லை. அதன்பின்னர் உடற்பயிற்றிகள். மூத்த உறுப்பினர்கள்தான் பயிற்சி தந்தனர். ஏல்லோருக்கும் தலைமயிர் மிகவும் குட்டையாக வெட்டப்பட்டது.

முதல் குளிப்பு

11 நாட்களின் பின்னர் குளிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வேலணைக்கு கொண்டு செல்லப்பட்டபின்னர் அன்றுதான் முதன் முதலாக குளிக்க அனுமதித்தனர்.

சில நாட்களுக்குப் பின்னர் 500-550 பேர்வரை அங்கிருந்து லொறிகளில் சாவகச்சேரி பயிற்சி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.

அந்த பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த உறுப்பினர்கள் அன்றுதான் வெளியேறினர். எமக்கு கை காட்டிக் கொண்டே சென்றனர்.

நாங்கள் அனைவரும் கொளுத்தும் வெய்யிலில் ஒரு வெட்ட வெளியில் இருக்க வைக்கப்பட்டோம். அங்கு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டோம். எங்களில் இருந்தே பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அங்கு இந்திய இராணுவத்தினரே எங்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அதிகாரியும், மூன்று இராணுவத்தினரும் பயிற்சி தரும் பொறுப்பை ஏற்றனர்.

நானும் எனது நண்பனும் 5வது பிரிவில் இருந்தோம். எங்களுக்கு அதிகாரியாக தமிழ் நாட்டைச் சேர்ந்த சந்திரமோகன் நியமிக்கப்பட்டார். எங்களுக்கு இரண்டுமாத பயிற்சி என அறிவிக்கப்பட்டது.

அங்கு ஈ.பி.ஆர். எல். எஃப். பொறுப்பாளராக ராபிக் என்பவர் இருந்தார். ஈ.பி.ஆர். எல். எஃப். மூத்த உறுப்பினர்களும் இருந்தனர். அங்கும் முன்னைய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தண்டனைகள்

இந்திய படையினர் பயிற்சி தந்தபோதும் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு ஈ.பி.ஆர். எல். எஃப். மூத்த உறுப்பினர்களிடமே இருந்தது.

யாரும் தவறு செய்யத்கூடாது. மீறும் பட்சத்தில் தண்டனைதான். மன்னிப்பு என்பதற்கே இடமில்லை. தண்டனைகள் பலவாறு தரப்படும்.

தென்னை மரத்தில் அரைவாசி உயரம் வரை ஏறி அப்படியே சில மணித்தியாலயங்கள் தென்னை மரத்தை கெட்டியாகப் பிடித்தபடி இருக்க வேண்டும்.

இதனால் நெஞ்சுப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு காயங்கள் தோன்றும். அல்லது நீண்ட தூரத்திற்கு முன்னோக்கி குத்துக்கரணம் அடித்தவாறு சென்று,பின்னர் பின்பக்கமாக குத்துக்கரணம் அடிக்கவேண்டும்.

ஒரு பிரிவில் யாராவது பிழைவிட்டால், அந்தப்பிரிவில் உள்ள அனைவருமே தண்டனை அனுபவிக்கவேண்டும்.

காலைச் சாப்பாடு கடலை, பாசிப்பயறு கௌபி அல்லது ரொட்டிதான் பகல் இரவு சோறுதான்.

முதன் முதலாக ஆயுதப் பயிற்சி ஏ.கே.47. துஎம்ப்பாக்கி, அதன் உதிரிப்பாகங்களின் தொழிற்பாடுகள், தோட்டா நிரப்பப்படும் எண்ணிக்கை, நிரப்பப்படும் முறை, ஒரு தோட்டா செல்லும் தூரம் (கில்லிங்ரேன்ஜ்) என்பவை விரிவாக விளக்கப்பட்டது.

இவ்வாறு எம்.70, எஸ்.எம்.ஜி, 9எம்.எம் (பிஸ்டல்) ஆர்.எல்.(ரொக்கட் லோஞ்சர்), 20எம்.எம். மோட்டார், கைக்குண்டு போன்றவை பற்றிய சகல பாடங்களும் எடுக்கப்பட்டன. ஏல்லாப் பாடமும் பயிற்சி கொப்பியில் எழுதினோம்.

தாக்குதல் ஒன்றுக்கு முன்னேறும் முறை, நிலை எடுக்கும் இடம் போன்றவையும் வகுப்புக்களில் சொல்லித்தரப்பட்டன.

தினமும் மாலை ஆறுமணிக்கு போராட்டக் காலங்களில் பலியான உறுப்பினர்களிக்காக அஞ்சலி செலுத்தப்படும்.

கண்டிப்பு

எங்களுக்கு பயிற்சி தந்த இந்திய இராணுவ அதிகாரியான சந்திரமோகன் எங்களுடன் கரிசனையோடு நடந்து கொண்டார்.

ஈ.பி.ஆர். எல். எஃப். மூத்த உறுப்பினர்கள் எங்களுடன் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

நாங்கள் நடத்துப்படும் முறை குறித்து அவர்களுடன் காரசாரமாக ஏசியிருக்கிறார். பயிற்சி முடியும்வரை இவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று அவர்களிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எங்களுக்கு மிகவும் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தார்.

அப்படியிருந்தும் மூத்த உறுப்பினர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. பலர் தப்பிச் சென்றனர். அதனால் பயிற்சி முகாமைச்சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டது முகாமின் முன்பக்கம் இந்திய இராணுவத்தினரின் சென்ரியும், பின்பக்கம் ஈ.பி.ஆர். எல். எஃப். மூத்த உறுப்பினர்களின் சென்ரியும் இருந்தது.

எங்கள்மீது அனுதாபம் கொண்ட இந்தியப் படையினர் சிலர் தாம் கடமையில் இருக்கும் நேரத்தில் எங்களில் சிலர் தப்பிச்செல்ல உதவினார்கள்.

ஒருமுறை எங்களில் ஒருவர் பின்பக்கமாக தப்பிச்செல்கையில் பிடிபட்டுவிட்டார். அவரை மூத்த உறுப்பினர்கள் மரத்தோடு கட்டிவைத்து அடித்தனர்.

தப்பிச்செல்ல முற்பட்டதால் இவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்போகிறோம். உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.

நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தயவு செய்து மன்னித்து விடும்படி கூறினோம் அதற்கு சம்மதித்து ஒரு நிபந்தனை விதித்தனர்.

நீங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு அடி கொடுங்கள் என்றனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரத்த காயங்களுடன் மயக்கமடைந்து கிடந்தவரை மெதுவாக முதுகில் தட்டி விட்டுப் போனோம்.

இச் சம்வத்தின் பின்னர் எங்களில் பலர் ஈ.பி.ஆர். எல். எஃப்.பை அழிக்க புலிகளுடன் சேருவதுதான் வழி என்று கூறிக் கொண்டிருந்தனர்.

உங்களால் முடியாது

பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் ஆம்ஸ் பயறிங் (துப்பாக்கி சுடும் பயிற்சி) தரப்பட்டது.

பயிற்சி முடிந்த பின்னர் எங்களை வழியனுப்பும்போது சந்திரமோகன் சேர் எங்களுக்கு சொன்ன வார்த்தை நாங்கள் போன பின்னர் நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ.யுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.

நாங்கள் இருக்கும் வரைதான் இந்த பயலுக (ஈ.பி.ஆர். எல். எஃப்.) கொட்டம் அடிப்பானுங்க. பின்னர் எங்கே ஓடுவார்கள் என்று எனக்கே தெரியாது. நிச்சயமாக உங்களால் எல்.ரீ.ரீ.ஈ.யுடன் மோதவே முடியாது என்று சிரித்தபடி சொன்னார்.

பின்னர் சாவகச்சேரியில் இருந்து மறுபடி அசோகா ஹாட்டல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம். வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் சுதந்திரமாக இருக்கமுடிந்தது. எங்களுக்கு மாத ஊதியமாக ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பின்னர் சென்ரிக் கடமைகளில் ஈடுபட்டோம். எங்களது சென்ரி சாந்தி தியேட்டர் முன்பாகவும், பெரியாஸ்பத்திரி முன்பாகவும் இருந்தது. ஒருநாள் புதிய உறுப்பினர்கள் இருவர் இரவுச் சென்ரி பார்த்துக் கொண்டிருந்தபோது ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்றனர். பலர் ஆயுதமின்றித் தப்பிச் சென்றனர்.

ஆயுதத்துடன் தப்பிச் சென்றவர்களின் குடும்பத்தினரைப் பிடித்துவந்து அடித்தனர். புலிகளின் தாக்குதல்களும் அதிகமாகிக் கொண்டிருந்தன. இனிமேல் தாமதித்தால் ஆபத்து என்று நினைத்து நானும் தப்பிச் சென்றேன் என்று தன் அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் கூறியவை சரியான தகவல்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இங்கு தரப்பட்டன.

1989 பெப்ரவரியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையும் கலக்கியது. பரபரப்பாக பேசப்பட்டது. அது அடுத்த வாரம்

(தொடர்ந்துவரும்)
அரசியல் தொடர் எழுதுவது -அற்புதன்

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 5 =

*