;
Athirady Tamil News

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்..!! (வீடியோ)

0

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் 3 மாதங்களுக்கும் மேல் வீணாகத் தாமதப்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றம் தொடர்ந்து கொடுத்த தீவிர அழுத்தத்தின் காரணமாகவும், தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் காரணமாகவும், காவிரி வரைவுத்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து, அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

இறுதியில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்திருக்கிறது. அதற்கு தன்னாட்சி அதிகாரம் இல்லை. அணைகளை திறப்பதற்கு இந்த ஆணையத்திற்கு அதிகாரமில்லை. தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி. தண்ணீர் எந்த மாதத்திற்கு குறைக்கப்போகிறார்கள் என்பதற்கும் வரைவுத் திட்டத்தில் விளக்கம் இல்லை.

பிரதமர் மற்றும் 4 மாநில முதல்-மந்திரிகள் தலைமையிலும் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தையே, பல் இல்லாத ஆணையம் என்று கூறிய அ.தி.மு.க., இப்போது பல் இல்லாதது மட்டும் இல்லை, வாயே இல்லாத ஒரு ஆணையத்திற்கு மத்திய அரசிடம் அடிபணிந்து கிடக்கிறது என்பது தமிழகத்திற்கு நேர்ந்த கெட்ட வாய்ப்பு.

ஜூன் 1-ந்தேதிக்குள் இந்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, தமிழகத்திற்குரிய தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்ற நிலையில், முழுமையான சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் இல்லாத ஒரு ஆணையத்தையாவது அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றால், அதற்கு விவசாயிகள் உள்ளிட்ட தமிழக மக்களுக்கும், இதற்காக அழுத்தம் கொடுத்த தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு காட்டிய தீவிர அணுகுமுறையும் தான் காரணமே தவிர, மத்திய பா.ஜ.க. அரசோ, மாநில அ.தி.மு.க. அரசோ மனமுவந்து போராடி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பூரணமாக நிறைவேற்றிவிடவில்லை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இப்போதாவது ஜூன் 1-ந்தேதி வரை காத்திராமல், இன்னும் ஒரு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், காவிரி ஒழுங்குமுறை நீராற்றுக்குழுவிற்கு உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.

அந்த ஆணையத்தின் அதிகாரத்திற்கு தன்னாட்சி அதிகாரம் இருக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்கி, தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர், தங்குதடையின்றி உடனடியாக கிடைத்து, டெல்டா மாவட்டங்களில் 6 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டிலிருந்தாவது குறுவை உள்ளிட்ட சாகுபடிக்கு ஆவன செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறப்பதற்கு உரிய தீவிரமான முயற்சிகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை படுகொலை நடைபெற்று 9 ஆண்டுகள் முடிந்தநிலையிலும் இன்னும் பலர் காணாமல்போய் இருப்பது குறித்து தி.மு.க. சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. கர்நாடக கவர்னர் செய்துள்ள தவறு வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது. எனவே, அவர் உடனடியாக கவர்னர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வது தான் ஜனநாயக மரபாக அமைந்திட முடியும். பிரதமர் மோடி அல்லது ஜனாதிபதி உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + thirteen =

*