;
Athirady Tamil News

ஈழ தாயின் கனவை நிறைவேற்றிய மகள்..!!

0

இவர்தான் என் அம்மா சோதி. சிறுவயதில் இருந்தே உலகம் முழுதும் பயணிக்க வேண்டும் என்கிற கனவுகளை சுமந்தபடி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சாகச மனுஷி என்று தனது அம்மாவை சிந்து அறிமுகம் செய்து வைப்பதிலேயே ஒரு சாகச கதைக்கு தயாராகிறது நம் மனது.

சிந்து பயணங்களை நேசிக்கும் பெண். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமானவர். பயணத்திற்கென ஒரு பக்கம் ஆரம்பித்து அதற்கு சிந்து_பாத் என்று பெயரிட்டு அனைவர் கவனத்தையும் பெயரிலேயே ஈர்த்துள்ளவர் என்றால் மிகையாகாது.

தனது பயணத்திற்கான ஆரம்ப பாதை தனது அம்மாவிடம் இருந்து தொடங்கியதாக இவர் கூறுகிறார். இவரும் இவரது அம்மாவும் இணைந்து தென்னாப்பிரிக்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் பிடித்த பயணம் இப்போது இன்னமும் ஆழமாக இவர்களின் பந்தத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

சிந்து தனது அம்மாவை பற்றி அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது.

வழக்கம் போல அனைத்து தமிழ்பெண்கள் போலவே தனது கனவுகளை மறந்து விட்டு குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிர்பந்தம் தனது அம்மாவிற்கும் ஏற்பட்டது.

ஆனால் வழக்கமான தமிழ் பெண்கள் போல் இல்லாமல் இவரது அம்மா சோதி தனக்குள் புதைத்து வைத்த பயணக்கனவை தன் மகள்களிடம் விதைத்து வைத்தார். விதைத்து வைத்தது மட்டுமல்லாமல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பக்குவமாய் அந்த விதையை செடியாக வளர்க்கவும் செய்திருக்கிறார்.

தனக்கு கிடைக்காத ஒரு சுதந்திரத்தை மகள்களுக்கு தந்து தன்னால் முடியாத ஒரு விடயத்தை அவர்கள் செய்து முடித்து விட்டு வரும்போது பூரிப்புடன் அவர்களை வரவேற்பதில் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார்.

அறிமுகமில்லாத இடங்களுக்கு போகும் வாய்ப்புகள் கிடைத்தால் அதனை விட்டு விட கூடாது என்று தனது அம்மா ஊக்கப்படுத்தியதால் தான் தன்னால் இப்போது இந்த வயதில் உலகம் முழுவதிலும் உள்ள 25 நாடுகளை சுற்றி பார்க்க முடிந்தது என்கிறார் சிந்து.

சிந்துவின் அம்மா அவருடைய கனவுகளை தனது மகள்கள் மூலம் நிறைவேற்றி கொண்டிருந்தாலும் தங்களை இவ்வளவு தூரம் சிறப்பாக மாற்றிய அம்மாவிற்கு தானும் திரும்ப ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சிந்து கருதியிருக்கிறார்.

வழக்கமான பொருள்சார்ந்த அல்லது பணம் சார்ந்த பரிசுகளைத் தருவதை விட அவரது அனுபவங்களை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்கும் ஒரு பரிசை கொடுக்க விரும்பியிருக்கிறார்.

அதன்படி அம்மாவை தன்னுடன் இணைந்து பயணிக்க தயார்படுத்தினார்.

சிந்துவின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட சோதி அவருடன் பயணிக்க தயாரானார்.

சிந்து தனது பயணத் திட்டம் பற்றி கூறுகையில், நாங்கள் இருவரும் இதுவரை அறிந்திராத ஒரு கண்டத்திற்கு செல்ல விரும்பினேன், மேலும் மிக குறுகிய மூன்று வார பயணத்திற்குள் எவ்வளவு நிலவழி பயணங்கள் மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

எங்களது சுற்றுலாவை ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு நகர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எளிதான பயணமாக இது இருந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் எனக்கொரு பயம் இருந்தது.

அம்மாவின் வயது மற்றும் உடல்நிலை இந்த பயணத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து கவலைப்பட்டாலும் அவரது தீராத தாகம் இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள உறுதுணை செய்யும் என்று நம்பினேன் என்றார் சிந்து .

ஆகவே ஜோகன்னஸ்பர்க் தொடங்கி கேப் டவுன் வழியாக அவர்கள் பேருந்து பயணத்தை தொடங்கினர். இந்த பயணம் இருவருக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று மட்டுமே நினைத்திருந்த சிந்துவிற்கு மறக்க முடியாத பல ஆச்சர்ய தருணங்களை வழங்கியது அவர்களின் தென்னாபிரிக்க பயணம்.

இருவரும் சேர்ந்து பல அழகான இடங்களை அழகான தருணங்களை பகிர்ந்து கொள்வோம் என்றுதான் நினைத்திருந்தனர், ஆனால் போகப்போக அந்த பயணத்திலேயே மிக ஆழமாக இறங்கி விட்டிருந்தனர்.

இதுவரை டிஸ்கவெரி சேனல்களில் மட்டுமே ரசித்திருந்த மிருகங்களை நேரில் கண்ட தனது அம்மா உற்சாகத்தின் உச்சியில் இருந்ததை சாட்சியாக பார்த்து கொண்டிருந்தார் சிந்து.

குதிரை சவாரி செய்த போது அம்மா காது வரை புன்னகைத்தது அவளது சந்தோஷத்தின் உச்சியை காட்டியது அது மட்டும் இல்லாமல் இறங்கியவுடன் குதிரையோடு அவள் பேசி கொண்டிருந்தது பார்க்கையில் தனது கனவுகள் நனவாகும் நிமிடங்களில் மனிதர்கள் ஒரு குழந்தை பெற்றெடுத்ததைப் போல அவர்கள் உணர்கிறார்கள் அல்லது அவர்கள் குழந்தையை முதன்முறையாக பார்க்கும்போது எப்படி இருக்குமோ அப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்கிறார் சிந்து.

தங்கள் பயணங்களின் முழுவதிலும் சோர்வடையாமல், வனப்பகுதியில் முகாமிடுதல், நீண்ட உயர்ந்த மலை பகுதிகளில் ஏறுதல், குதிரை சவாரி செய்தல், கயாகிங், மலையில் வண்டி ஓட்டுதல், அனைத்தையும் பேக் செய்து ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு புதிய இடத்திற்கு நகர்தல் போன்றவற்றை உற்சாகமாக செய்த இவரது அம்மா, தனது நீண்ட நேர பேருந்து பயணங்களில் தனக்கு தெரிந்த குறைந்த ஆங்கிலத்தில் அருகில் உள்ளோரிடம் உரையாடிய விதம் அவரது உள் ஒளியின் சாட்சியாக இருந்தது.

அங்குள்ளோர் அனைவருமே அவரை “மம்மா” என்றே செல்லமாக அழைத்துள்ளனர். அந்த அளவிற்கு அவரது பிரியம் மொழியறிவில்லாதவருக்கும் புரியும் வகையில் இருந்தது என்கிறார் சிந்து.

ஏற்கனவே தனது அம்மாவின் மிகப்பெரிய ரசிகையான சிந்து இந்த பயணத்தின் போது அவர் மீது ஒரு வித மரியாதையும் கௌரவமும் தனக்கு வந்ததாக கூறுகிறார்.

தானும் தனது அம்மாவை போன்றே வலிமையான தன்னலமற்ற தைரியமான பெண்மணியாக வாழ வேண்டும் என்று விரும்புவதாக சொல்லும் சிந்து, சமூக/கலாச்சார கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வெளியில் வந்து பயணிக்கும் தன் அம்மாவின் இந்த பயணம் யாரையும் பாதிக்காத போது தவறேயில்லை என்றும் கூறுகிறார்.

தவிர இந்த பயணத்தின் மூலம் உலகின் ஒரு துளியை மட்டுமே தன் அம்மா கண்டு ரசித்திருந்தாலும் அவரது வயது, உடல்நிலை, குடும்ப பொறுப்பு அனைத்தையும் தாண்டி தனது கனவுகளை நனவாக்கிக் கொண்ட அவரது அசாத்திய துணிச்சல் மதிப்பிற்குரியது மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு நல்ல உதாரணமும் கூட என்று தனது பயணக் கட்டுரையை முடித்திருக்கிறார் சிந்து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + nine =

*