;
Athirady Tamil News

கிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துசம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(21) காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்

ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே, அரசியல் தீர்வா விலைவாசி உயர்வா?, அரசே விலையைக் குறை கூட்டமைப்பே மௌத்தைக் கலை, அரசியல் தீர்வுக்கு பரிசு விலைவாசி உயர்வா?, உள்ளுர் உற்பத்திக்குச் சந்தையைத் தா வெளிநாட்டு இறக்குமதிக்கு தடையே போடு,வேலைவாய்ப்பை தா விலையேற்றத்தை குறை, விவசாயிகள் பாடு திண்டாட்டம் முதலாளிகள் பாடு கொண்டாட்டம், சிறு கடன் தொடர் கடன் பெருங்கடனில் நாங்கள் கூட்டாட்சி நல்லாட்சி கொழுத்த ஆட்சியில் நீங்கள், நெல்லுக்கு நிர்ணய விலை வேண்டும் விவசாயிகள் நிமரவேண்டும், கடலால் சூழப்பட்ட நாடா இல்லை கடனால் சூழப்பட்ட நாடா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

மேலும் இப் போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில்

நாட்டின் பொருளாதாரம், மக்களுடைய வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நல்லாட்சி அரசாங்கம், அவற்றைச் செய்யாமல் விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது.

பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக இருந்து தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசின் இவ்வாறான மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு துணைபோய்க்கொண்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

விவசாய உற்பத்தியில் முதல் நிலை வகித்து வந்த கிளிநொச்சி மாவட்டம் இன்று வறுமையில் முதலிடம் வகிக்கிறது என்ற துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்களை இந்த விலைவாசி உயர்வு மேலும் கடுமையாகப் பாதித்துள்ளது. அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள வறிய, நடுத்தர நிலையில் உள்ள மக்களும் இந்த விலைவாசி உயர்வினால் மிகுந்த

பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனைச் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துத் தன எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.

நாட்டிலே உற்பத்தித்துறையை ஊக்கப்படுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் இறக்குமதி செய்வது” என்ற தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும்.

போரின் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலையிலிருக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள், மிகுந்த சிரமங்களின் மத்தியிலே விவசாயம், கடற்தொழில், பனை, தென்னைவள உற்பத்திகள், சிறுதொழில் முயற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உற்பத்திகளுக்கான நியாய விலையையும் சந்தை வாய்ப்புகளையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது.

இதற்குப் பதிலாக பெரும் நிறுவனங்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பையே அரசாங்கம் முன்னுரிமைப்படுத்துகிறது. நாடு முழுவதிலும் இந்த நடைமுறையையே அரசாங்கம் பின்பற்றிவருகிறது.

இது மக்களை நேரடியாகப் பாதிப்பதுடன் ஒட்டு மொத்தத்தில் நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கும் தவறான நடவடிக்கையாகும்.

இந்தத் தவறான நடைமுறையினால் நாடு பெரும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனைச் சமாளிப்பதற்காக மக்களின் நாளாந்த வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் விலைவாசி உயர்வை அதிகரிப்புச் செய்து கொண்டேயிருக்கிறது அரசாங்கம்.

மக்களின் மீது ஏற்றப்படும் எத்தகைய சுமையும் நாட்டை மீள முடியாத பாதிப்புக்கே கொண்டு செல்லும் என்பது உலகறிந்த உண்மையாகும். இந்தத் தவறான நடைமுறையை இன்று நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எத்தகைய எதிர்ப்பையும் காட்டாமல் முழுமையாக ஆதரிக்கிறது.

எனவே மக்களின் மீது வரிச்சுமைகளையும் விலைவாசி உயர்வையும் தொடர்ந்தும் ஏற்றிக் கொண்டிருப்பதை விடுத்து, நாட்டின் உற்பத்தித்துறையை மேம்படுத்துவதைப்பற்றியே அரசு சிந்திக்க வேண்டும்.

சர்வதேச நிதி நிறுவனங்கள், பல்தேசியக் கம்பனிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதைப் பற்றியும் அதற்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கையை வகுப்பதைப்பற்றியும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

இலங்கைத்தீவு இன்று கடன் சுமையில் மீள முடியாத அளவுக்குச் சிக்கியுள்ளது. மக்களும் தனிப்பட்ட ரீதியில் தொடர்கடன், பெருங்கடன் என மீள முடியாத கடன் பொறியில் சிக்கியிருக்கிறார்கள்.

“கடலால் சூழப்பட்டதை விடவும் கடன் சுமையினால் இலங்கைத்தீவு சூழப்பட்டுள்ளது” என பொருளாதாரத்துறையினர் கவலை கொள்ளும் அளவுக்கு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தவறாக அமைந்துள்ளது.

இதனை மாற்றி அமைப்பதன் மூலமே மக்களின் சுமையைக் குறைக்க முடியும். இல்லையெனில் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியே தீரும் என எச்சரிக்கை விடுக்கின்றோம்.

என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eight =

*