;
Athirady Tamil News

தற்போதுள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்..!!

0

இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம், என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினை தீரும் என்று நம்புகின்றேன். அந்தக் கனவு என்றாவது ஒரு நாள் நனவாகும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேண்டு மென்று சிலரால் திரிவுபடுத்தி மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரதேசத்துக்கு பிரதேசம் மொழிக்கு மொழி, மாறி மாறி கருத்துக்களை பேசுபவன் நானல்ல. இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை நாட்டுக்கு வெளியே சென்று பேசப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் கூட, நடைமுறையில் அது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

1988, 1989 ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அந்தப் பிரச்சினைக்கு எதிராக அந்த கொலைகளுக்கு எதிராக முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா வரை சென்றவர்கள் வேறு யாருமல்ல, மஹிந்த ராஜபக்‌ஷ, வாசுதேவ நாணயக்கார போன்றோராகும்.

அவர்கள் சென்றதை சரியானது என்று அன்று நான் சொன்னேன். உள்நாட்டில் தீர்வில்லை நீதியில்லை. நியாயமில்லை. நிம்மதியில்லை என்றும் அரசாங்கத்தின் நம்பிக்கை இழந்து தான் வெளிநாட்டுக்கு அந்தப் பிரச்சினைகளை கொண்டு சென்றனர்.

இதேபோல இன்றும் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளனர்.

ஆகவே, ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வேண்டாம், அமெரிக்கா செல்ல வேண்டாம், ஐரோப்பா செல்ல வேண்டாம் என்று சொல்வார்களானால் உள்நாட்டில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நீதியையும் நியாயத்தை தரவேண்டும் என்றே நான் கூறியிருந்தேன். இதை எடுத்து திரிவுபடுத்தி வெட்டிக்குத்தி மக்களுக்கு தவறாக கொண்டு சென்றார்கள்.

இந்த நாட்டு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை முதன் முதலாவது இலங்கைக்கு அழைத்து வந்தது நான் தான். நவநீதம்பிள்ளை, அல்ஹுஸைன் எல்லாம் யுத்தம் முடிந்ததன் பின்னர் தான் வந்தார்கள். ஆனால் 2006 ஆம் ஆண்டு அன்றைய மனித உரிமை ஆணையாளர் லூயி சாபரை அழைத்து வந்தேன். சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே நான் அழுத்தம் கொடுத்து அவரை அழைத்து வந்தேன்.

வட கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்தாகும். அந்த இணைப்புக்காக கிழக்கு மாகாணத்தில் வாழக் கூடிய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வட கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கிருக்கின்ற மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சமமாக வாழ்கின்றார்கள் அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையிலே இன பதற்றம் இனச் சிக்கல் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணங்கள் தோன்றக் கூடாது என விரும்புகின்றேன். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த நாடு பல்லின பண் மொழி பல சமயங்கள் பேசப்படும் கடைப்பிடிக்கப்படும் பல இனங்கள் வாழும் நாடாகும். பண்முகத்தன்மை என்பது எமது எதிர்காலமாகும். ஆகவே எதிர்காலத்தை சரியான முறையில் அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது.

ஒரே மொழி ஒரே மதம் ஒரே இனம் என்றால் இந்த நாடு துண்டு துண்டாக பிளவுபடும் இதனை நான் சொல்லவில்லை. எனக்கு முன்னுள்ளோர் சொன்ன விடயமாகும். அதனை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

சில முட்டாள்கள் ஒரே நாடு ஒரே மதம் ஒரே இனம் என்ற நடைமுறையை கொண்டு வரப்பார்க்கின்றார்கள். அல்லது பெரும்பான்மை மதம் பெரும்பான்மை இனம் என கொண்டு வரப்பார்க்கின்றார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு கீழ் படிந்துதான் தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.

நாட்டில் ஐக்கியம் வேண்டும் ஒற்றுமை வேண்டும். என்பதற்காக எங்களது தன்மானத்தையும் சுய மரியாதையையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.

தன்மானத்தையும் சுய மரியாதையையும் விலை பேசி விற்று விற்றுத்தான் இந்த நாட்டில் ஐக்கியம் வரவேண்டும் என்றால் அந்த ஐக்கியம் எமக்கு தேவையில்லை.

இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜையாக தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ முடியாது. அதே போனல் முதல் தர பிரஜையாக இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்கள் வாழ முடியாது. எல்லோரும் சமனாக இருக்க வேண்டும்.

மொழி ரீதியாக சமத்துவமாக இருக்க வேண்டும். சமத்துவம் தான் ஐக்கியத்திற்கான முதல் நிபந்தனையாகும். ஆகவே சமத்துவமில்லாமல் பேசுவார்களானால் அது தொடர்பில் எனக்க உடன்பாடு கிடையாது.

தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு என்ற அமைச்சை இந்த அடிப்படையில் தான் முன்னெடுக்க விரும்புகின்றேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்து வந்தேன். அந்த அமைச்சை நான் நடாத்திய விதம் குறித்து ஜனாதிபதி திருப்தியடைந்தன் காரணமாகத்தான் ஜனாதிபதி தனக்கு கீழே இருந்த தேசிய ஒருமைப்பாடு அமைச்சையும் என்னிடம் தந்துள்ளார்.

அதையும் சேர்த்துக் கொண்டு கடந்த கால வளங்களையும் இணைத்துக் கொண்டு இரண்டாம் கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளேன். அந்த பயணம் என்பது நாட்டில் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

29 நடமாடும் சேவைகளை நடாத்தியுள்ளோம். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை நடாத்தியுள்ளோம். இந்த நடமாடும் சேவைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.

பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை போன்றவற்றை பெறக் கூடிய வாய்ப்பையும் வசதியையும் இந்த நடமாடும் சேவைகள் மூலம் ஏற்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் மக்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக அரசாங்க காரியாலயத்திற்கு ஏறி இறங்கிளார்கள். அதை மாற்றி மக்களை நாடி நாங்கள் வருகின்றோம் எனவும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + ten =

*