;
Athirady Tamil News

வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் தாய்மார் இருவர் விசாரணைக்காக அழைப்பு..!!

0

வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்கள் இருவர் கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் புகைப்படத்தில் தமது பிள்ளைகள் உள்ளதாக தெரிவித்து கடந்த ஒரு வருடங்களிற்கும் மேலாக வவுனியாவில் போராட்டம் நடத்திவரும் காசிப்பிள்ளை ஜெயவனிதா மற்றும் ஜோகேஸ்வரன் சந்திராணி ஆகிய இருவரே பயங்கரவாத விசாரணை பிரிவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காணாமல் போன இருபிள்ளைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறும் முகமாக கொழும்பு 01 இல் அமைந்துள்ள இரண்டாம் மாடி கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான மூன்றாம் பிரிவு அதிகாரியை சந்திக்குமாறே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ம் திகதி ஜோகேஸ்வரன் சந்திராணி அவர்களையும் மறுநாள் 16 ம் திகதி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களையும் விசாரணைக்கு அழைத்ததுடன் காலை 11 மணிக்கு ஆரம்பமான விசாரணை 2 மணி நேரங்கள் நீண்டதாக அவர்களால் கூறப்பட்டது.

அத்துடன் தம்முடைய பிள்ளைகள் பற்றிய விபரங்களை கேட்டறிந்ததாகவும் ரகசிய முகாம்கள் எதுவும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று கூறியதுடன், ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரமே தங்களை விசாரணைக்கு அழைத்ததாக கூறியதாக, விசாரணைக்கு சென்ற தாய்மார்கள் தெரிவித்தனர். கடந்த 2016 ம் ஆண்டும் இவர்களை இதே பிரிவினர் அழைத்து விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு தாய்மார்களின் பிள்ளைகளான யோ.மயூறன், கா.ஜெறோமி ஆகியோர் கடந்த இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனமையின் பின்னர் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வெளியிடப்பட்ட நூறு நாளில் புதிய நாடு என்ற தேர்தல் துண்டுபிரசுரத்தில் தற்போதைய அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அருகாமையில் குறித்த இரு பிள்ளைகள் உட்பட 4 பிள்ளைகள் நிற்பதாக அவர்களின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + nine =

*