மூதாட்டியை கடுமையாகத் தாக்கிய கொள்ளையர்கள் – அணிந்திருந்த நகைகள் பறிமுதல்..!!

வீட்டில் தனித்திருந்த மூதாட்டியையும் அவரது உதவியாளரையும் மோசமாகத் தாக்கிவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டியில் நடந்துள்ளது.
இரவு 11.30 மணியளவில் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த மூதாட்டியையும் அவருக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணையும் பணம் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்டு மோசமாகத் தாக்கியுள்ளனர்.
அவர்களைக் கட்டிவைத்து விட்டு வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடி அலுமாரிக்குள் இருந்த பணத்தையும் பெண்கள் இருவரும் அறிந்திருந்த சங்கிலி மோதிரம் தோடுகள் போன்ற நகைகளையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக் காலை அயலவர்களால் இரு பெண்களும் காப்பாற்றப்பட்டு கொடி காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் எனவும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.