;
Athirady Tamil News

இலங்கை இந்து பௌத்த பூமி: வேறு யாருக்கும் சொந்தமில்லை- சிவசேனை..!!

0

இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (26-05-2018) முன்னெடுக்கப்பட்டது.

பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.

எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.

இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத வாதம் சார்ந்து சிவசேனை அமைப்பு செயற்படுகின்றது என்றும், இந்தியாவின் இந்துத்துவாவைப் போன்று இலங்கையிலும் மதவாத சிந்தனைகளை விதைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும், தெற்கில் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களும், கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றவர்கள் செய்யும் மத மற்றும் இனவாத சிந்தனைகளைப் போன்று இவர்கள் செயற்படுகின்றார்கள் என்றும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மதங்களிடையே இது போன்ற சிந்தனைகளை விதைத்து இலங்கையில் மதக் கலவரத்தினை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் சிவசேனை அமைப்புக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*