;
Athirady Tamil News

யாழில் போதைப் பொருட்களுக்கெதிரான விழிப்புணர்வுப் பேரணி..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ். திருநெல்வேலியில் போதைப் பொருட்களுக்கெதிரான விழிப்புணர்வுப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை(29) காலை நடாத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலிப் பரமேஸ்வராச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தா. தியாகமூர்த்தி தலைமையில் ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி பலாலி வீதியூடாக திருநெல்வேலிச் சந்தியைச் சென்றடைந்தது.

குறித்த விழிப்புணர்வுப் பேரணி திருநெல்வேலிச் சந்தியைச் சென்றடைந்ததும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் “போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் “, இருட்டிலிருக்கும் இளைஞர்களுக்கு ஒளிகொடுக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்”, ‘காப்போம்…காப்போம்….நாட்டையும், வீட்டையும் காப்போம்”, “நம் தமிழினத்தின் மீது எறியப்பட்ட நச்சு விதைகளை அகற்றுவோம்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பியதுடன் பல பதாதைகளையும் தம் கைகளில் தாங்கி போதைப் பொருட்களுக்கெதிராக உரத்துக் குரல் கொடுத்தனர்.

இன்றைய விழிப்புணர்வுப் பேரணியிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கருத்தரங்கிலும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தமாதம்-11 ஆம் திகதி நல்லூர் பிரதேச சபையின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திருமதி- வாசுகி சுதாகர் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முன்வைத்த பிரேரணையைச் சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மேற்படி பிரேரணை தீர்மானமாக நிறைவேறியது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் முன்வைத்த பிரேரணைக்கமைவாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக ஒருவருடம் போதைப்பொருட்களுக்கெதிரான பல்வேறு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைத் தவிசாளரின் அனுமதியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திருமதி- வாசுகி சுதாகரினால் “போதைப் பாவனையை முற்றாகத் தடை செய்வோம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து போதைப்பொருட்களுக்கெதிராகப் பல்வேறு விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நல்லூர் பிரதேச சபை ஏனைய பிரதேச சபைகளுக்கு முன்னுதாரணமாக இடம் பிடித்துள்ளது. நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்குடன் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றி பெற நாமும் எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*