;
Athirady Tamil News

அப்போ குசேலன், இப்போ காலா.. மீண்டும் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பாரா ரஜினிகாந்த்?..!!

0

காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. சமீபகாலங்களில், காவிரி தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவான சில கருத்துக்களை அவ்வப்போது, ரஜினிகாந்த் கூறியிருந்தார். காவிரி அணைகளின் பொறுப்பு கர்நாடகாவிடம் இருக்க கூடாது என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கன்னட அமைப்பினர் ரஜினிகாந்த்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பிற மொழிகளின், பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போதெல்லாம், வம்பு செய்வது கன்னட அமைப்பினர் வேலையாக உள்ளது. பாகுபலி-2 வெளியான போது எப்போதோ ஒருமுறை சத்யராஜ் பேசிய பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டால்தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்றனர். இதையடுத்து சத்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அப்படி மன்னிப்பு கேட்பாரா, அல்லது கர்நாடக மார்க்கெட்டை பற்றி கவலைப்படமாட்டாரா என்பதை அறியும் முன்பாக ஒரு குட்டி பிளாஷ் பேக். 2008ம் ஆண்டு ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் காவிரிப் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அதில் இறுதியாக பேசிய ரஜினிகாந்த், கர்நாடகத்தில் பேருந்துகளைக் கொளுத்தும், வன்முறை வெறியாட்டம் போடும், தண்ணீர் தரவிடாமல் தடுக்கும் வன்முறையாளர்களை உதைக்க வேண்டாமா? என கொந்தளித்தார்.

இந்த போராட்டம் முடிந்த அடுத்த சில தினங்களில் குசேலன் படம் வெளியாகவிருக்கிறது. அங்கே கன்னட அமைப்பினர் ரஜினிக்கு எதிரான போராட்டங்களை வரிசையாக ஆரம்பித்தனர். ரஜினி அப்போது ஒரு கடிதம் கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலாவுக்கு எழுதினார். அதில் படம் வெளியாக உதவுங்கள் எனக் கேட்டிருந்தார். அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தார். கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த், “குசேலன் படம் தொடர்பாக நான் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதில் குசேலன் படத்தை வெளியிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

இந்த நிலையில் சில கன்னட அமைப்பினர் நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருவது என் கவனத்துக்கு தெரியவந்தது. நான் கன்னட மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் “உதைக்க வேண்டும்” என்று சொன்னது, பஸ்களை கொளுத்தியவர்களுக்கும், பொதுச் சொத்துக்களை சேதம் விளைவித்தவர்களுக்கும் மட்டுமே பொருந்தும். மற்றவர்களை பொதுவாக குறிப்பிட்டு அப்படிச் சொல்லவில்லை. கன்னட மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

நான் ஒரு பேச்சாளனோ, அரசியல்வாதியோ கிடையாது. எனவே பேசும்போது தவறுகள் ஏற்படுவது சகஜம். இதன் மூலம் கன்னடர்களிடம் நான் புதிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன். ஏதோ நடக்காதது நடந்து விட்டது. இனிமேல் இதுபோல் நடக்காது.

இனி நான் பேசும்போது யாருடைய மனதும் நோகாதபடி கவனமாகப் பேசுவேன். என் படங்களுக்கு கர்நாடகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும் பணம் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிக்கக் கூடாது. எனவே, குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக ஒத்துழைப்பு கொடுங்கள். நீங்கள் கன்னடத்துக்காக போராடுங்கள். உங்கள் போராட்டத்துக்கு ஊக்கம், ஒத்துழைப்பு கொடுக்க தயார். நான் இன்று பணம், புகழோடு இருப்பதற்கு காரணம் நான் ஆரம்பத்தில் பார்த்த கண்டக்டர் வேலைதான்.

கண்டக்டராக வேலை செய்ததை நான் இன்னும் மறக்கவில்லை…” இவ்வாறு கூறியிருந்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் இந்த பேட்டியால் மனம் குளிர்ந்த கன்னட அமைப்புகள் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தன. இப்போது மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் தயாரிப்பாளராக உள்ள படத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை ஒரு மாமனாராக ரஜினிகாந்த் சகித்துக்கொள்வாரா? அல்லது குசேலன் பட பிரச்சினையின்போது கையாண்ட மன்னிப்பு யுக்தியை கையில் எடுப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 10 =

*