;
Athirady Tamil News

போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்! : ரஜினி..!!

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யத் தொடங்கினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கருத்து தெரிவித்தார்.

கடந்த 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர். இன்று (மே 30) காலை தூத்துக்குடி சென்று, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். தூத்துக்குடி பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் இன்று மாலை 5 மணியளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தடை செய்ய வேண்டுமென்று சமூக விரோதிகள் அதில் உள்ளே புகுந்ததாகத் தெரிவித்தார்.

“ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளன்று எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து கெடுத்தார்களோ, அதேபோன்று இதிலும் செய்துள்ளனர். அங்கு இருந்தவர்கள் மீனவர்கள், அப்பாவிப் பொதுமக்கள். காவல் துறையினரைத் தாக்கியதும், குடியிருப்புப் பகுதிகளை எரித்ததும் சமூக விரோதிகள்தான். இந்த தகவல் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்க வேண்டாம். அந்த சமூக விரோதிகள் யாரென்று வெளியில் அடையாளம் காட்ட வேண்டும்” என்றார்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போராட்டத்தின்போது, காவலர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ வெளியானது. அப்போது, காவல் துறைக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார் ரஜினிகாந்த். தற்போதும் அதே நிலைப்பாடில் இருப்பதாகத் தெரிவித்தார். “சமூக விரோதிகள் போலீசாரைத் தாக்கியதால்தான், இந்த பிரச்சினையே ஆரம்பித்தது. காவலர் சீருடையில் இருப்பவர்களை அடித்தால், எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்” என்றார்.

இந்தச் சந்திப்பின்போது சில செய்தியாளர்களே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டதால், ஒருகட்டத்தில் டென்ஷன் ஆனார் ரஜினிகாந்த். வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்று அதட்டும் தொனியில் கேட்டார். “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கினால், தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்று கோபத்தோடு கூறியவர், செய்தியாளர்களிடம் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேசியபோது, வழக்கத்திற்கு மாறாக அவரிடம் பதற்றம் தென்பட்டது. இன்று மதியம், அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். அந்த கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்துப் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையிலேயே, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இதுநாள்வரை வெளிப்படுத்திய இயல்புக்கு மாறாக அவர் நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ரஜினிகாந்த். அதன் பின், தான் தங்கியிருந்த விடுதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அங்கு, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை வரவழைத்துப் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“இந்த மாதிரி ஒரு சம்பவம் இனிமேல் நடக்கவே கூடாது. நூறு நாள் நடத்திய மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கின்றனர். அவர்களுடைய வேலைதான் இது. போராட்டம் செய்யும்போது ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் ஜாஸ்தி ஆகிவிட்டார்கள். ஜல்லிகட்டு போராட்டத்திலும் அதுதான் நடந்தது. இந்தப் புனிதப் போராட்டமும் ரத்தக் கறையுடன் முடிந்திருக்கிறது. இந்த விஷக் கிருமிகளை, சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அரசாங்கம் அடக்க வேண்டும். அந்த விதத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். இப்போதிருக்கும் மாநில அரசு, இந்த விஷயத்தில் அவரைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டுக்கு ரொம்பவே ஆபத்து” என்று கூறினார்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் அடிக்கடி போராட்டம் நடைபெறுவதாகவும், மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். “தமிழ்நாடு போராட்ட பூமியாக மாறினால், எந்தத் தொழிலும் இங்கு வராது. எந்த வியாபாரமும் இங்கு வராது. இளைஞர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல், இங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. வேலைவாய்ப்பும் இல்லையென்றால், இன்னும் கஷ்டமாகிவிடும். போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கும்போது, அரசு எல்லா விதிமுறைகளையும் பார்த்து அனுமதியளிக்க வேண்டும். ஏதாவது பிரச்சினை நடந்தால் நீதிமன்றங்களை நாட வேண்டுமே தவிர, போராட்டம் என்றிருந்தால் மிகவும் கஷ்டமாகிவிடும்” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததை கவனிக்கத் தவறியது உளவுத்துறை செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

அரசாங்கம் உத்தரவிட்ட பிறகும் நீதிமன்றத்தை நாடினால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் மனிதர்களே கிடையாது என்று பேசினார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இனி எந்த அரசு அமைந்தாலும், அந்த ஆலைக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். காவல் துறையினரைத் தாக்கிய சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட வேண்டுமென்று தெரிவித்தவர், தமிழகப் பிரச்சினைகள் எல்லாவற்றிலும் திமுக அரசியல் செய்துவருவதாகக் கூறினார்.

போராட்டம் நடத்துவதற்கு எதிராகவும், காவல் துறைக்கு ஆதரவாகவும் ரஜினி பேசியிருப்பது, பல்வேறு அதிர்வுகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் கருத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 12 =

*