;
Athirady Tamil News

வலிமைமிக்க சமூகத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும்: சர்வேஸ்வரன்..!!

0

‘வலிமைமிக்க சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் இன்று (வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானிப்பதென்பது அந்த நாட்டின் மக்களுடைய அறிவு வலிமை. இந்த அறிவு வலிமையினுடைய அடித்தளம் பாடசாலை.

அதனைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஆகவே எங்களுடைய சமூகத்திலிருக்கும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் இரட்டிப்பாகும். எங்களுடைய ஆசிரியர்கள் பல விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுடைய மாணவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் வல்லுனர்களாக ஆக்கவேண்டும். அவ்வாறு அவர்களை வல்லுனர்களாக ஆக்கவேண்டுமாக இருந்தால் அவர்களுடைய ஆற்றல்களை ஆசிரியர்கள் அடையாளம் காணவேண்டும். அவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

எந்தவொரு மாணவனும் குறைந்தவனல்ல. எல்லா மாணவர்களிடத்திலும் ஏதாவது ஒரு ஆற்றல் ஒளிந்திருக்கிறது. அந்த ஆற்றல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் ஆசிரியர்களுக்குத் தேவை. மாணவர்களுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்போமாக இருந்தால் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு துறையில் வல்லுனர்களாவார்கள்.

அவ்வாறு வல்லுநர்களாக மாறுகின்ற போது எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இனம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறிவிலும் வலிமையிலும் அதிகமாக இருக்கவேண்டும். அத்தகைய வலிமைமிக்க சமூகமாக எமது சமூகம் நிலைபேறானதாக இருக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*