;
Athirady Tamil News

வடமராட்சியில் நீண்டகாலம் புனரமைப்பின்றிய வீதியால் மக்களின் அவலம்..!! (படங்கள்)

0

யாழ். வடமராட்சி கிழக்கின் தாளையடி தொடக்கம் கேவில் வரையான வீதி நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமையால் குறித்த வீதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் பெரும் அசெளரியங்களை எதிர்கொள்வதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் மேற்படி வீதியே கடற்கரையோரத்தின் பிரதான வீதியாகக் காணப்படுகின்றது. தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில் உள்ளிட்ட கிராம மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இவ்வீதியையே முக்கியமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் இவ்வீதியால் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறைப் பகுதிகளுக்குத் தினமும் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வீதியால் பயணிக்கும் நோயாளர்கள், வயோதிபர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேச மக்களின் பெரும்பாலானோரின் வாழ்வாதாரத் தொழிலாக மீன்பிடித் தொழில் காணப்படும் நிலையில் மீன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கும் இந்த வீதியையே அதிகம் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் குறித்த வீதி கடுமையாகச் சேதமடைந்துள்ள காரணத்தால் அடிக்கடி துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைவதாகவும், விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் இப்பிரதேச மக்களின் வாக்குகளைக் குறிவைத்து அபிவிருத்திகளைச் செய்து தருவதாகப் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி விட்டுச் செல்கின்ற போதும் தேர்தலில் தாம் வெற்றி பெற்ற பின்னர் தமது வாக்குறுதிகளை மறந்து சுயநல சிந்தனையுடன் செயற்படுவதாக இப்பிரதேச மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, நீண்டகாலமாகத் திருத்தப்படாமையால் பயணிக்க முடியாதவாறு மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ள குறித்த வீதியைப் புனரமைப்பதற்கு உரிய தரப்பினர் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென இப்பிரதேச மக்களும், வீதியால் போக்குவரத்துச் செய்யும் வாகனச் சாரதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − three =

*