;
Athirady Tamil News

அரச பயங்கரவாதத்தை மறைக்க தமிழர்கள் பலிக்கடா! – அருட்தந்தை சக்திவேல்..!! (வீடியோ)

0

அரச பயங்கரவாதத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதென்றும், அதனைக் கொண்டுவந்தவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின் கீழ் அப்பாவி தமிழர்களே தண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழகத்தில் (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ‘அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி’ எனும் தொனிப்பொருளினாலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது, கைதுசெய்யப்பட்டதன் பின்னரே குற்றங்கள் சுமத்தப்பட்டன என்றும், கடுமையான சித்திரவதைகள் மூலம் தெரியாத மொழிகளில் வலுக்கட்டாயமாக வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளை சிங்கள மக்கள் பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை என்றும், அதனாலேயே முன்னாள் போராளிகளை புனர்வாழ்வுக்கு முன்னதாக தெற்கிற்கு அழைத்துச் சென்றபோது சிங்கள மக்கள் அமைதியாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறாயின், இந்த தடைச்சட்டம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பழிவாங்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல் கோரிய சந்தர்ப்பத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 108 பேர் தடுப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டதாகவும், இவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 8 =

*