கணவன்களை காக்க தனி ஆணையம் – ஆந்திரப்பிரதேச மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்..!!

ஆண்களின் கொடுமை, குடும்ப வன்முறை ஆகியவற்றில் இருந்து பெண்களைக் காக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் ஆணையம் செயல்படுகிறது. ஆனால் மனைவியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் கணவன்களைக் காக்கவும், அவர்களின் மனக்குறையைக் கேட்டு பிரச்சனைகளை தீர்க்கவும் தனியாக எந்த ஆணையமோ, அமைப்போ இல்லை.
இதுகுறித்து ஆந்திரப்பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான நன்னாபனேனி ராஜகுமாரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலவரப்படி, பெண்களின் கொடுமையைக் தீர்த்துவைக்க தனியாக ஆணையம் உள்ளது. அதேபோல ஆண்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து அவர்களைக் காக்க தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேச இருக்கிறேன்.
ஆண்கள் மீது மனைவிகள் நிகழ்த்தும் கொடுமைக்கு அதிகரித்துவரும் டிவி சீரியல்களே காரணம் என கருதுகிறேன். தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களைப் புகுத்திவிடுகின்றன. இதுபோன்ற நாடகங்கள் பெண்களின் மனதில் ஆண்கள் குறித்த தவறான எண்ணத்தையும், சமூகத்திலும் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. சமுதாயத்துக்கு பெரிய எதிர்மறையான விளைவுகளை இந்த சீரியல்கள் ஏற்படுத்துகின்றன.
தொலைக்காட்சி சீரியல்களில் எதிர்மறையான சிந்தனைகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்ற விதிகளைக் கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால், திரைப்படத்துக்கு மட்டுமே தணிக்கை வாரியம் இருக்கிறது, தொலைக்காட்சி சீரியல்களுக்கு இல்லை என அவர் பதில் அளித்தார். ஆண்களுக்காகத் தனி ஆணையம் அமைக்க மீண்டும் குரல் கொடுப்பேன், என ராஜகுமாரி கூறினார்.