;
Athirady Tamil News

வட.மாகாணம் கல்வியில் முதலிடத்திற்கு வரவேண்டும்: சர்வேஸ்வரன்..!! (படங்கள்)

0

எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது அனைவரும் பாடுபட வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாங்கள் ஒரு சாதாரணமான நாட்டிலிருந்து சாதாரண சூழலிலிருந்து இந்த பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை. பாரிய போர் ஒன்றைச் சந்தித்து அதன் அழிவுகளைத் தாங்கி அந்த அழிவுகளில் இருந்து தற்போது மீண்டெழுந்து வருகின்றோம்.

30 ஆண்டுகள் கொடிய போருக்குப் பின்னரும் நாங்கள் மீண்டெழுகிறோம் என்றால் அது எங்கள் எல்லோரினதும் அயராத உழைப்பு என்றே சொல்ல வேண்டும்.

இன்று பிரதிக் கல்விப்பணிப்பாளர்களாக பதவியேற்கும் நீங்கள் அனைவரும் எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது பாடுபட வேண்டும்.

ஒரு அமைச்சராக நானும் சரி எங்களுடைய அதிகாரிகளும் சரி ஆசிரியர்களும் சரி எங்கள் எல்லோருக்கும் தொடர்ச்சியான பொறுப்புக்கள் இருக்கின்றன.

அந்த வகையில் உங்களுக்கும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் என்ற வகையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நீங்கள் எந்தளவுக்கு வினைத்திறனாக செய்கின்றீர்களோ அந்தளவுக்கு எங்களுடைய மாகாணத்தை கல்வியில் உயர்த்த முடியும். ஆகவே நீங்கள் அனைவரும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களின் அடிப்படையில் நிர்வாக ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு எங்களுடைய அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − twelve =

*