;
Athirady Tamil News

விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு கருணை காட்டுங்கள்..!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர்

0

விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு கருணை காட்டுமாறு வவுனியா வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (09.06.2018) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு மக்கள் ஏதோ ஒரு விதத்தில் இன்னொருவருடைய தேவையை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இவர்களை வலு விழந்தோர் என்று அழைக்கலாம். இலங்கையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 87 பேர் வலுவிழந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருகின்றார்கள். இது உலக சனத்தொகைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது என்றாலும் உலகம் முழுக்கப்பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் வலு விழந்தோர்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.

வலு விழந்தோர் என்று சொல்லும் போது ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பிறருடைய உதவி தேவைப்படகின்றது. அவர்களை வலு விழந்தோர் என்று கணிப்பிட முடியும்.

உலக அளவில் ஒரு பில்லியன் வலு விழந்தோரில் 110 மில்லியன் பேர் கட்டாயமாக வேறு எவரும் உதவியைச் செய்தால் மட்டுமே தமது வாழ்வைக் கொண்டு செல்லக்கூடிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். இலங்கையில் அத் தொகை 1.6 மில்லியன் பேராக கணிக்கப்பட்டிருக்கின்றது.

வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் 25 ஆயிரம் பேர் போருக்குப் பின்னரான சூழ் நிலையில் வலு விழந்த ஆட்களாக கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடமாகாணத்தில் சகாதாரத் திணைக்களத்தின் ஊடாக வலு விழந்தோர் பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் அது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. சில மாவட்டங்களில் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வலு விழந்தோர் என்று சொல்லும் போது உடற் தொழிலியல் சம்மந்தமான வலு விழந்தோராகவும் கணிக்கலாம் அல்லது மன ரீதியில் வலு விழந்தோராகவும் கணிக்கலாம்.

மனவியல் ரீதியாக வலுவழந்தோருக்கு மனத்திடம் குறைவாக இருக்கும் சில விடயங்களை அவர்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களை வேறு ஒருவர் ஆறுதல்படுத்தி உதவி செய்தால் அவர்களின் வாழ்க்கையை இனிமையாகக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.

உடலியல் ரீதியில் என்று பார்த்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் கை, கால்களை இழந்தவர்கள் இவ்வாறு அடையாளப்படுத்த முடியும் அதே போல கை கால்கள் இருந்தாலும் பலருக்கு கை, கால்கள் இயங்க முடியாமல் இருக்கும் ஆட்கள் போர் நடைபெற்ற சூழ்நிலையில் போர் காரணமாக அவயங்கள் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதியாகிக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் தற்போது பார்த்தால் போர் இடம்பெற்ற சூழலைத் தவிர மிகவும் மேசமாக இருக்கின்றது. நிலையை தொற்றா நோய்களாலே பாரிச வாதம் போன்ற தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.

அதுபோல வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டு வலு விழந்தோராக கணிக்கப்படுகின்றவர்கள் நாளாந்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அது மிகவும் ஒரு வேதனைக்குரிய சம்பவம்

ஏனேன்றால் வவுனியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஏ9 வீதியில் வீதி விபத்துக்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. வீதி விபத்தினால்பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவருக்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவருடைய உயிரைக்காப்பாற்றிய பிற்பாடு அவரை வைகறை என்ற புனர்வாழ்வு நிலையத்தில் வவுனியா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்குக் கீழ் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு புனர்வாழ்வு நிலையத்தை நடாத்தி வருகின்றோம். அதிலே அனுமதிக்கப்பட்டு அவர்களின் நாளாந்தத் தேவைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று விசேட பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை வீடுகளுக்குத்திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அவர் வீட்டிற்குப் போகும்போது சமூகம் அவரை சாதாரனமாகப் பார்க்கப்படுவதில்லை ஒன்று அவரின் உட்கட்டமைப்பு அவருக்கான விசேட மலசலகூடம் தேவை அவர் செயற்படுவதற்கு நாற் சக்கரவண்டி தேவை சாய்தளம் அமைக்கப்படவேண்டும் அவ்வாறான உட்கட்டமைப்புக்கள் எங்களுடைய சமூகத்தில் இன்று வரையில் கொண்டு வரப்படவில்லை.

நோயாளர்களை இங்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வீட்டிற்குக் கொண்டு சென்ற போது பெரும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சமூகத்தில் விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டியது கட்டாயம் அதன் முதற்கட்டமாக மோட்டி விசன் ஸ்ரீ லங்காவுடன் இணைந்து தாதியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதுடன் சமூகத்திற்கும் இச் செய்திகளை வழங்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் .

சமூகத்தில் இருப்பவர்கள் சகலரும் வலு விழந்தோரை தங்களுக்குரியவர்கள் என்று பார்வையிட்டு அவர்களுக்கு தட்டிக்கொடுத்து அவர்களை வாழ்வியலில் முன்னேற்ற வேண்டும் என்பது சமூகத்திலுள்ளவர்களின் பொறுப்பு

அலுவலகங்கள், வைத்திசாலைகளில் சகல அரச சார்பற்ற நிறுவனங்களிலும் அனுகுவசதிகளை வலுவழந்தோருக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிலே ஒரு பொறுப்பு இருக்கின்றது. அனைவரும் உணர்ந்து அதனை மேற்கொள்ளவேண்டும்.

வீதி விபத்துக்களினால் யாரும் அடுத்த நிமிடங்களில் வலுவழந்தோராக மாற்றக்கூடிய சந்தர்ப்பம் இந்த நாட்டிலே நிறையவே காணப்படுகின்றது. எவ்வாறு இதிலிருந்து எம்மைப் பாதுகாத்து கொள்வது எங்களுடைய அவயவங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

வைகறை புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்களுடன் வந்து ஒரு நிமிடங்கள் செலவிட்டால் அவர்களுக்கு பெரிய மன ஆறுதலாக இருக்கும் நீங்களாகவே முன் வந்து இங்கிருப்பவர்களின் குறை நிறைகளைக் கேட்டு உங்களால் இயலக்கூடிய உதவிகளை மேற்கொள்வதாலே அவர்களும் ஆறுதல்படுவார்கள்.

அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஆறுதல் படும் மற்றவர்களுக்கு உதவிகள் புரிந்து இந்தச் சமூகத்தைக் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முன் வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*