;
Athirady Tamil News

தவராசாவின் பணத்தை வழங்க கிழக்கு பல்கலை. மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை மீளக் கையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தை நேரில் வழங்க கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

வடக்கு மாகாண சபை அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்க வரும் எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்தப் பணம் வழங்கப்படும் என மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டிருந்தது. நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை செய்வதன் அடிப்படையில் அந்த ஏற்பாடும் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நினைவேந்தல் நிகழ்வில் புறக்கணிப்பட்டனர என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.
எனினும் உறுப்பினர்களின் பணம் முழுவதும் செலவிடப்பட்டதாகவும் அதனை மீள வழங்குவதில்லை எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது. அதனால் தனது கோரிக்கையை தவராசா கைவிட்டார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை மீளக் கையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் ஒரு ரூபா வீதம் சேகரிக்கப்பட்டது.

அந்தப் பணமே தவராசாவிடம் நேரில் கையளிக்கப்படுவதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் எடுத்து வந்துள்ளனர்.

இதேவேளை, முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஊடாக வழங்க மாணவர் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்தனர். எனினும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தன்னால் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + six =

*