;
Athirady Tamil News

வவுனியா வடக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அசமந்தம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு..!! (படங்கள்)

0

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில் புளியங்குளம் மற்றும் வெடிவைத்த கல் கிராமத்தின் பாடசாலைகள் பாழடைந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமைக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே காரணம் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

நெடுங்கேணி நகரப்பகுதியிலிருந்து 18 கிலேமீற்றர் தூரத்தில் கோவில் புளியங்குளம் கிராமமும், 20 தாவது கிலோமீற்றர் தூரத்தில் வெடிவைத்தகல் கிராமமும் அமைந்துள்ளது. இந்த கிராமங்கள் நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

யுத்தத்தின் காரணமாக பல்வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் 2009 பின்னரான காலப்பகுதியில் தங்கள் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறிய நிலையில் கிராமங்களில் எந்தவிதமான அபிவிருத்திகளும் செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. வடபகுதியை பொறுத்தவரையில் சின்ன சின்ன கிராமங்கள் கூட இன்றைய காலப்பகுதியில் முன்னேற்றங் கண்டுள்ள நிலையில் கோவில் புளியங்குளம் மற்றும் வெடிவைத்தகல் கிராமங்கள் யுத்தத்தின் வடுக்களை தாங்கிய நிலையில் அபிவிருத்தி எதனையும் மேற்கொள்ளாத நிலையில் பாழடைந்து காணப்படுகின்றது.

வெடிவைத்த கல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பாடசாலையானது இந்நிய அரசின் நிதியுதவியுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பாவனையில் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. கட்டிடமானது பயன்படுத்தக்கூடிய நிலையில் காணப்படுகின்ற போதிலும் பராமரிப்பு இல்லாத நிலையில் பாடசாலையின் பிரதான வாயிலானது உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது.

நெடுங்கேணி வடக்கு கோவில்புளியங்குளம் அ.த.க. பாடசாலையானது புனரமைக்கப்பட்ட நிலையிலும் இழுத்து மூடப்பட்டு புதர்கள் மண்டிய பிரதேசமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒலு மடு பாடசாலைக்கு சென்று கல்விகற்று வருகின்றனர்.

இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இக்கிராமங்களில் மீள் குடியேறி வாழ்வாதாரத்திற்காக விவசாயம், மீன்பிடி, காட்டில் தேன் எடுத்தல் மற்றும் மந்தை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த நிலையிலும் மீள்குடியேற்றமானது சரிவரச் செய்யாத காரணத்தால் குடியேறிய சொற்ப மக்களும் மீண்டும் இடம்பெயரும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி கோவில்புளியங்குளம் கிராமத்தில் 40 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 06 குடும்பங்கள் மாத்திரமே வசித்து வருகின்றனர், அதேபோல் வெடிவைத்தகல் கிராமத்தில் 36 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் இன்று 4 குடும்பங்களே வசித்து வருவதாக சுட்டிக்காட்டிய கிராம மக்கள் போக்குவரத்து பிரச்சனை, நிர்வாக பிரச்சனைகள் சீர் செய்யப்படாத காரணங்களால் மக்கள் மீள்குடியேற தயங்குவதாக தெரிவித்தனர்.
கிராமத்தில் யானைகள் நடமாட்டம், வீதிகள் சீர்செய்யப்படாமை போன்ற காரணங்களால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்ல அஞ்சுவதாகவும் மக்களை அரச அதிகாரிகள் அலைக்களிப்பதன் காரணமாகவும் அடிப்படை வசதிகள் நிவாரணங்கள் வழங்காததன் காரணமாகவும் மக்கள் கல்வி மற்றும் சுகாதாரம், மருத்துவம் போன்ற காரணங்களுக்காக கிராமத்திலிருந்து வெளியேறிவருவதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராமத்திற்கு வரும் அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குவதாகவும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களை காண முடிவதில்லை என்றும் கவலை வெளியிட்ட கிராம மக்கள், கோவில் புளியங்குளம் மற்றும் வெடிவைத்தகல் அதனை சூழவுள்ள கிராமங்களான கோரமோட்டை, நொச்சிக்குளம், ஊஞ்சல்கட்டி, மருதோடை போன்றவை அபிவிருத்தி செய்யப்படாமைக்கும், மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைந்து போனமைக்கும் நெடுங்கேணி பிரதேச செயலாளரும் கிராமத்தின் கிராம உத்தியோகத்தருமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

கோவில் புளியங்குளம் கிராமத்தில் சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வந்த நிலையில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் சேவைகளை பெற்றுக்கொண்டு வந்த நிலையில் தற்போது அவ் சுகாதார நிலையமும் இயங்காத காரணத்தால் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்கள் 20 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நெடுங்கேணி ஆதார வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது.

மழை காலங்களில் வெள்ளம் ஆறாக ஓடிவரும் நிலையில் வீதிகளை ஊடறுத்து தண்ணீர் பாய்வதால் மழை காலங்களில் எமது கிராமங்கள் தனித்தீவுகளாக மாறி விடுகின்றன போக்கு வரத்துக்கள் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுவதால் யாரும் எங்களை வந்து பார்ப்பதில்லை.

நாட்டில் வளப்பங்கீடானது சரியாகவும் நியாயமாகவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுதான் அதிகமான பிரச்சனைகளுக்கு பிரதானமான காரணமாக இருக்கிறது. வவுனியாவில் பல கிராமங்கள் ஓரளவு அபிவிருத்திகளை பெற்றுள்ள நிலையில், கோவில் புளியங்குளம் மற்றும் வெடி வைத்தகல் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவதியுறுவது மிகப்பெரும் அநியாயமாகும்.

ஒரு சில பிரதேங்களுக்க அபிவிருத்திகள் வழங்கப்பட்டும், வேறு சில பகுதிகளுக்கு அபிவிருத்திகள் கிட்டாமல் போவதற்கும், அரசியல்வாதிகளே பிரதான காரணமாக உள்ளார்கள். தங்களுக்கு எங்கெல்லாம் வாக்ககளை கணிசாமான அளவு ‘கறந்து’ கொள்ள முடியும் என கணக்கிட்டு அங்கெல்லாம் அபிவிருத்திகளை அரசியல்வாதிகள் செய்கிறார்கள். குறைந்தளவு வாக்குள்ள பகுதிகளை கவனத்தில் கொள்ளாது ஊதாசினம் செய்கிறார்கள் இதன் காரணமாக மிகவும் பின்தங்கிய கிராமங்கயிலுள்ள மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் அழிவுகளையும் இடம்பெயர்வுகளையும் சந்தித்த கிராமங்களில் கோவில்புளியங்குளம் மற்றும் வெடிவைத்த கல் கிராமங்களும் அடங்கும். அமைதியான இயற்கை அழகினையுடைய .க்கிராமங்களில் மக்கள் மீள்குடியேறத் தொடங்கிய நிலையிலும் அடிப்படைத் தேவைகளுக்hக அலைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் கிராமத்தின் அமைதியினையும், அழகினையும் இக்கிராம மக்களினால் அனுபவிக்;க முடியவில்லை, கிராமத்தை சூழவும் காடும் காடுசார்ந்த இடங்களும் பச்சை பசேல் என்ற மரங்கள், குயில்கள்,மைனாக்கள் மற்றும் குரவிகளின் சத்தங்களை எல்லாம் கேட்க முடிகிறது, வெளிப்பிரதேசத்திலிருந்து வரும் ஒருவரால் இவற்றையெல்லாம் கேட்க முடிகிறது அனுபவிக்க முடிகிறது.

ஆனால் கோவில்புளியங்குளம் கிராமத்தில் வாழ்பவர்களால் இதை அனுபவிக்க முடிவதில்லை நிவாரணம் பெறுவதற்காக குழந்தைகளை பாடசாலைக்கும் அனுப்பாமல் கோவில் புளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகாமையில் மதிய நேர உணவு கூட இல்லாமல் மாலை வரை சமூர்த்தி நிவாரணத்துக்காக காத்திருக்கும் மக்களால் தங்கள் கிராமததை எப்படி ரசிக்க முடியும்?

நாட்டின் ஒரு பகுதியினர் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதேவேளை இன்னும் சிலர் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எத்துணை பெரிய துயரமாக இருக்கிறது. கிராமத்தின் தேவைகள் அவசரமாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும். ஆரம்ப படித்தரத்திலுள்ள வைத்தியசாலையாவது இக்கிராமத்தில் நிறுவப்படவேண்டும் ஆனால் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடி விட்டு சென்றுள்ளார்கள் என்பதுதான் அங்குள்ள நிலவரமாக இருக்கின்றது.

கோவில்புளியங்குளம் மற்றும் வெடிவைத்தகல் கிராமங்களுக்கு புதிய அபிவிருத்திகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னர் முதலில் அங்குள்ளவற்றை நல்லபடியாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கையை பிரதேச அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.

கோவில்புளியங்குளம் மற்றும் வெடிவைத்தகல் கிராமங்களில் கைவிடப்பட்டிருக்கும் பாடசாலைகள் பாழடைந்து போய் யாருக்கும் பிரியோசமின்றி கிடக்கிறது என்பது அலட்சியத்தின் உச்ச கட்டமாகும், இனியாவது கோவில்புளியங்குளம் மற்றும் வெடிவைத்தகல் கிராமங்களை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் திரும்பி பார்க்க வேண்டும், பாடசாலைகள் மீண்டும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அந்த கிராமங்கள் அபிவிருத்தி பெற்று அழகுற வேண்டும்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*