;
Athirady Tamil News

இந்து மக்களின் உணர்வுகளை புரிந்தவனாக, இந்து சமய விவகார பிரதி அமைச்சை துறக்கிறேன்: காதர் மஸ்தான்..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு நான் பிரதி அமைச்சராக 12-06-2018 அன்று அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மத ரீதியாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாகவும், இது தொடர்பாக ஊடகங்களுடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விமர்சனங்கள் தொடர்பாகவும் கட்டாயம் பதிலளிக்கவேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.
சமய ரீதியாக நான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவனாகவிருந்த போதும் எமது ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்ச்சமூகத்தின் சமய, கலை, கலாச்சார விழுமியங்களை நான் மிகவும் மதிப்பவன் என்ற வகையிலும் எனது பாராளுமன்றப் பிரவேசத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் என்ற வகையிலும் என்னால் இந்து சமய கலாச்சார விடயங்களுக்கு எந்தவிதமான பங்கமும் வரமாட்டாது என்பதற்கு எம்முடன் இணைந்து வாழும் தமிழ்ச்சமூகம் சான்றாகவுள்ளது.

ஏனவே இது தொடர்பாக விமர்சனம் தெரிவிக்கும் அன்பர்கள் காலத்தால் தாமதித்து உங்கள் யதார்த்தமான உணர்வுகளை அனுபவத்தால் வெளிப்படுத்துங்கள் என்று அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். ஏன்னைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எனது மக்களுக்கு அவர்களது நீண்ட காலப்பிரச்சனைகளாகவுள்ள மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி தொடர்பாக அர்ப்பணிப்புடனான கடமையை ஆற்றவேண்டுமென்ற ஆர்வத்துடனும் விருப்புடனும் இருந்த எனக்கு இப்பதவி கிடைத்தமையை நான் வரப்பிசாதமாகக் கருதுவதுடன் அவ்வமைச்சுடன் சார்ந்து வரும் இந்து சமய விவகாரத்திலும் பணியாற்றுவதற்கு எனக்கு எவ்வித இடர்பாடுகளுமில்லை.

வன்னி மக்களாற் குறிப்பாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட நான் எவ்வகையிலும் எச்சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு இனத்திற்கோ எந்தவொரு மதத்திற்கோ தீங்கிழைத்தவனும் இல்லை. அதனை நினைத்தவனுமில்லை. எனது தந்தையார் எனது குடும்பம் தமிழ் இந்து மக்களுக்குக் குறிப்பாக அனர்த்த காலங்களில் எவ்வளவோ உதவிகளை வழங்கி வந்ததுடன் இன்றும் அதனைத் தொடர்ந்து செய்துவருவதுடன் மேலும் செய்வதற்கான விருப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு சம்பந்தமாக எம்மோடு எமது பாதையிற் பயணிக்கும் தமிழ்ச்சமூகத்தைச் சார்ந்த சமூக சமய உணர்வு நிரம்பிய அன்பர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்துச் செயற்படுவோம் என்பதனையும் கூறிக் கொள்கின்றேன்.

இந்து மக்களின் உணர்வுகளை புரிந்தவனாக ஜனாதிபதி அவர்களை சந்தித்து குறித்த இந்துமத அலுவல்கள் தொடர்பான விடயத்தை தனது பிரதி அமைச்சு பொறுப்பிலிருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க அதனை ஏற்றுக்கொண்ட அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்து சமய பிரதி விவகார அமைச்சிலிருந்து என்னை நீக்கியுள்ளார் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி.

கா.காதர் மஸ்தான் (பா.உ)
மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு
வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும்,
ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும்,
(வவுனியா, மன்னார். முல்லைத்தீவு)

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 1 =

*