;
Athirady Tamil News

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!

0

புல்லுமலை குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட புல்லுமலை, கும்புறுவெளி மக்களின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டை, கிழக்கு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பு, மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளித்துள்ளது.

இவ்வமைப்பினால் கையளிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”மட்டக்களப்பு, புல்லுமலை, கும்புறுவெளி பகுதியிலுள்ள பல ஏக்கர் காணிகளில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரியளவிலான தொழிற்சாலை ஒன்றினை தனியார் நிறுவனமொன்று ஆரம்பிக்கவுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குறித்த புல்லுமலை பகுதியானது கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்ட வறுமையான மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடானது காலகாலமாக இருந்து வருவதுடன். மழை நீரை நம்பியும், அங்குள்ள குளங்களையும் நம்பியுமே மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை மேற்கொள்கின்றார்கள்.

மேற்படி நீர்பற்றாக்குறை காணப்படும் இப்பகுதிகளில் 180 – 200 மீற்றர் ஆழம் வரையான குழாய் கிணறு அடித்து நிலக்கீழ் நீர், குளங்கள் மற்றும் உன்னிச்சை நீர்பாசனத் திட்டம் ஆகியவற்றில் நீரைப் பெற்று அதனை போத்தலில் அடைத்து விற்பதற்கான தொழில்சாலையாகவே இது அமையவிருக்கின்றது.

இத்தொழில்சாலை அமைப்பதற்காக 22 இற்கு மேற்பட்ட அரச மற்றும் அரசசார்பற்ற திணைக்களங்கள், நிறுவனங்களின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அரச கட்டமைப்பு திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளிடம் அனுமதிபெற்று இத் தொழில்சாலை அமைக்கபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் ஊடக அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தவோ அல்லது அவர்களின் ஆலோசனைகளை கேட்கவோ இல்லை.
மேலும் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பாக பேசப்படவும் இல்லை. தொழில்சாலை அமைப்பதற்கான அனுமதிகளும் வழங்கப்படவும் இல்லை.

இருந்தபோதும் திட்டமிட்ட வகையில் உரிய அரச திணைக்களங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி குறித்த நிறுவனம் அனுமதிகளைப் பெற்று இருக்கின்றது. இது முற்றிலும் மனித உரிமை மீறலாகும்.

எனவே மக்களின் விருப்பம் இல்லாமல் எமது அடிப்படை உரிமையான உணவினை கேள்விக் குறியாக்கும் மேற்படி தொழிற்சாலை அமையப் பெறுமாகவிருந்தால் கிராமமக்கள் மாத்திரம் இன்றி மட்டக்களப்பு மாவட்டமே கீழ் குறிப்பிடப்படும் பாதிப்பிற்குட்படுத்தப்படுவோம் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்

1. புல்லுமலை பிரதேசமானது கடல் மட்டத்திலிருந்து 125 மீற்றர் உயரமானது. இதனால் இப்பகுதிகளில் 180-200 மீற்றர் ஆழத்தில் குழாய் கிணறு அடித்து தண்ணீர் உறிஞ்சப்படுமானால்; இப்பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் உவர்த்தன்மையாக மாற்றம் பெற்று விவசாயம் முற்றாக பாதிக்கப்படும்.

2. குளங்கள் மற்றும் நிலத்தடி நீரை நம்பி வாழும் விவசாயங்கள், மீன்பிடிகள், ஏனைய உயிரினங்கள் மிருகங்கள் மற்றும் காடுகள் என்பன அழிவடையும் இதனால் மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்து மேலும் வறுமைக்குள்ளாவார்கள்.

3. புதிய வகையான நோய்கள் ஏற்படுவதுடன், இறப்புக்களும் அதிகரிக்கும்.

4. குளங்கள், பாவனைக் கிணறுகளில் நீர் வற்றிப் போவதுடன், குடிநீர் தட்டுபாடு மேலும் அதிகரிக்கும்.

5.பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியோhர் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே இலங்கையில் சுயாதீனமாக இயங்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது இத் தொழில்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை இதனை உடன் நிறுத்தி மக்களின் உயிர் வாழும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்கு உதவுங்கள் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + sixteen =

*