;
Athirady Tamil News

வலிகள் சுமந்த வலிகாமம் வடக்குப் பிரதேச இடப்பெயர்வும் முகாம் மக்களின் இன்றைய நிலையும்..!! (வீடியோ & படங்கள்)

0

பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய வளமான வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு ஆனி மாதம்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரேநாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் என்றென்றும் மறக்க முடியாத வலிகள் சுமந்த வலிகாமம் வடக்குப் பிரதேச இடப்பெயர்வின் 28 ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள தற்காலிக நலன்புரி முகாம்களுக்கு நான் கடந்த காலங்களில் சென்றிருந்த போது அவர்கள் படும் அவலங்கள் கண்டு உள்ளம் நொந்திருக்கின்றேன். இன்றைய நாளிலும் பல்வேறு நலன்புரி முகாம்களுக்கும் நான் நேரடியாகச் சென்றிருந்தேன்.

வலிகாமம் மண் செம்மண் வளம் நிறைந்த மண், விவசாயத்துக்கு உகந்த மண். அதிலும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மயிலிட்டி, தையிட்டி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகள் கடற்தொழிலுக்கு உகந்த சூழலமைவைக் கொண்ட பகுதிகள்.

இவ்வாறான வளங்கள் நிறைந்த பகுதிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டமையால் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நிலமிழந்து,வீடிழந்து, சொத்திழந்து கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக யாழ். மாவட்டத்திலுள்ள பல்வேறு நலன்புரி நிலையங்களில் அனுபவித்து வரும் துன்பங்கள் பற்பல.

கடந்த-2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் வலி.வடக்குப் பிரதேசத்தின் பல பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதும் வலி. வடக்கின் முக்கிய பிரதேசமாகக் காணப்படுகின்ற மயிலிட்டிப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் பலாலி, வசாவிளானின் சில பகுதிகள் என்பன இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

இடம்பெயர்ந்து மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்கள் எவரும் இதுவரை அவர்களின் சொந்தவிடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை என இடம்பெயர்ந்த நலன்புரி நிலையங்களின் பொதுநிர்வாக உபதலைவர் உதயசூரியன் சுதர்சன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அதேபோன்று மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி முகாம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம், கண்ணகி நலன்புரி முகாம்,பிள்ளையார் நலன்புரி முகாம் மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பிரதேசங்களிலுள்ள தற்காலிக நலன்புரி முகாம்களிலும் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்காலிக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் கடும் மழை மற்றும் கடும் வெயில் காலங்களில் அனுபவிக்கும் துயரங்கள் ஏராளம். குடிநீர், மலசலகூடம், இருப்பிடம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றியும், வேலைவாய்ப்பின்மை மற்றும் இளவயதுத் திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல உளநெருக்கீடுகளுக்கும் உள்ளாகி வாழ்ந்து வருகின்றனர்.

சொந்தவிடங்களில் பலர் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருபுறம் மகிழ்ச்சி வெளியிடப்பட்டாலும், சொந்தவிடங்களில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை தொடர்பிலும், பல பகுதிகளில் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படாமை தொடர்பிலும் மறுபுறம் அதிருப்தியும்பொதுமக்களால் வெளியிடப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் அவல வாழ்வுக்கு விரைவில் ஒரு முடிவு கிடைக்க வலிகாமம் வடக்குப் பிரதேச இடப்பெயர்வின் 28 ஆம் ஆண்டு நிறைவு நாளான இந்நாளில் நாமனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போம். எமது நிலம் எமக்கானது என்பதில் என்றென்றும் நாம் உறுதியாகவிருப்போம்.

– செ.ரவிசாந்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*