;
Athirady Tamil News

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி – அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா..!!

0

உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை மீறலான சில தயாரிப்புகளின் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி தருவோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்கள், வாகனங்கள், மீன் உணவுகள் உள்பட 545 பொருள்களுக்கும், வேதியியல் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 114 பொருள்களுக்கும் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*