;
Athirady Tamil News

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், ஆப்பிள் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்த இந்தியா முடிவு.!!

0

அமெரிக்காவுக்கு பதிலடியாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், ஆப்பிள், பாதாம் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும், கூடுதலாக வரி விதிப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இதன் மூலம் அந்நாட்டுக்கு 241 மில்லியன் டாலர் வரி கூடுதலாக வசூலாகும் என தெரிவிக்கப்பட்டது.

image

இந்நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 30 பொருட்களுக்கு இந்தியா வரிகளை அறிவித்துள்ளது. 800 சிசிக்கு அதிமான எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் பைக்குக்கு 50 சதவீதம், பாதாம், வால்நட்டுக்கு 20 சதவீதம், ஆப்பிளுக்கு 25 சதவீதம் உள்பட 30 பொருட்களுக்கான வரி விதிக்கப்படவுள்ளது. அமெரிக்காவுக்கு அளித்து வந்த இச்சலுகைகளை ரத்து செய்வதன் மூலம் இந்தியாவுக்கு 238 புள்ளி பூஜ்ஜியம் 9 மில்லியன் டாலர் வசூலாகும் என உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது.

image

அமெரிக்காவின் வரிவிதிப்புக்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரிக்கட்டும் வகையில் வரி விதிக்கப்படுவதாக இந்தியா உலக வர்த்தக நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் உருக்கு அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்த வரியை நீக்கும் வரை இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும் எனவும் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே 18 ஆம் தேதி, கடலை வகைகள், கோதுமை, சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், கோகோ பவுடர், சாக்லெட் பொருட்கள் உள்ளிட்ட 20 பொருட்களுக்கு வரிவிதிப்பதாக உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய வரி விகிதம் வரும் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா உடனான வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். மருத்துவ சாதனங்கள் விலை நிர்ணயம்,இந்திய உருக்கு அலுமினியத்துக்கு கூடுதல் வரி, விசா, வரிக் குறைப்பு உள்ளிட்டவை குறித்து அமெரிக்க அமைச்சருடன் வரும் வாரத் தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*