;
Athirady Tamil News

இடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு..!! (படங்கள்)

0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) 15 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அகழ்வுப் பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிகளை மன்னார் மாவட்ட புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் இன்று மாலை நேரில் சென்று அவதானித்துள்ளார்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை 7.30 மணியளவில் 15 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் இணைந்துள்ளனர்.

அத்துடன், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவம், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினருடன் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த வாரம் குறித்த அகழ்வுப் பணிகளின்போது முழுமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 9 =

*