;
Athirady Tamil News

குடும்ப தகராறில் 2½ வயது குழந்தையை தலைகீழாக தரையில் அடித்த கொடூர தந்தை..!!

0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் அவிந்திகா (2½).

இந்த நிலையில் வேல்முருகன், தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று இரவு 10.30 மணியளவில் வேல்முருகன் மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்ப தகராறு வந்தது. இதில் ஆத்திரத்தில் இருவரும் ஒருவரையொருவர் திட்டினர்.

இதனால் ஆவேசம் அடைந்த வேல்முருகன், அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை அவிந்திகாவை தூக்கினார். திடீரென அவர் ஆத்திரத்தில் குழந்தை அவிந்திகாவை தலைகீழாக தூக்கி ஓங்கி தரையில் அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து வீறிட்டு அழுதது. இதை கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார்.

தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த குழந்தையை தூக்கி அமுதா கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவிந்திகாவை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தை அவிந்திகாக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் வேல்முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

நேற்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பெற்ற குழந்தையை கல்நெஞ்சத்துடன் தந்தையே தலைகீழாக தூக்கி தரையில் அடித்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 9 =

*