;
Athirady Tamil News

ஆர்டர்லி பணியில் உள்ள போலீசாரை பட்டாலியனுக்கு அனுப்ப கேரள டி.ஜி.பி. உத்தரவு..!!

0

கேரளாவில் போலீஸ் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றிய சுதேஷ்குமாரிடம் கார் டிரைவராக இருந்த போலீஸ் காரர் கவாஸ்கர் என்பரை ஏ.டி.ஜி.பி.யின் மகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட நேரத்திற்கு தன்னை அழைத்துச் செல்ல அவர் காரை எடுத்து வரவில்லை என்று கூறி இந்த தாக்குதல் நடந்தது. இதே போல கேரளாவில் போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் போலீஸ்காரர்களை நாய்களை குளிப்பாட்ட வைப்பது, வீட்டு வேலைகள் செய்யச் செய்வது போன்றவை அதிகளவில் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தது.

இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

போலீஸ்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் இதுபோன்ற பணிகளில் இருப்பது தெரியவந்தது.

இந்த ஆர்டர்லி போலீஸ்காரர்களை மீண்டும் ஆயுதப்படை மற்றும் பட்டாலியன்களில் பணியாற்ற அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து இவர்களை விடுவித்து மீண்டும் பட்டாலியனுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு சில உயர் போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் ஆர்டர்லி பணியில் உள்ள போலீசாரை பட்டாலியனுக்கு திருப்பி அனுப்ப ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் போலீசாரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + four =

*