;
Athirady Tamil News

UNHCR இல் இருந்து அமெரிக்கா வெளியேற்றம் – இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும்..!!

0

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ள திட்டமிட்ட சதி முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகிறது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (20) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்த அமெரிக்கா விலகியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, சர்வதேச மட்டத்தில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தம் ஒன்று குறைவடையும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா முதலில் எதிர்ப்பினை வெளியிட்டது.

எனினும், கடந்த காலங்களில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை அடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமையவே ஞானசார தேரர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்று எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவை படுகொலை செய்த மதகுரு மரண தண்டனையை அனுபவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு வருடங்கள் சிறை சென்றார். இவை யாவும் நீதிமன்றத்தின் தீர்ப்புகள். யாரும் மாற்ற முடியாது.

சந்தையில் பொருட்களின் விலையேற்றம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையின் வரலாற்றில் பொருட்களின் விலை ஏறி இறங்குவது வழக்கம். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து வகைகள் போன்றவற்றின் விலை மட்டங்கள் இன்னமும் குறைவாகவே காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 9 =

*