;
Athirady Tamil News

தவறான முன்னுதாரணமாகும் வவுனியா நகரசபைத் தீர்மானம், சவால்விட்டு வென்ற வர்த்தகர்..!!

0

நகரசபை வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியாக, தவறான முன்னுதாரணம் ஒன்றினை ஏற்ப்படுத்தக்கூடிய ஒரு தீர்மானத்தை நேற்றயதினம் (21-06-2018 ) புதிதாக நகரசபையின் ஆட்சியை கைப்பற்றிய கூட்டணி நிறைவேற்றியுள்ளமை சமூக நோக்கர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

நகரசபைக்கு சொந்தமான காணியில் நகரசபையின் தடைகளையும், எச்சரிக்கைகளையும் மீறி நகரசபையினரை உதாசீனம் செய்து கட்டப்பட்ட கடைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அந்த சட்டவிரோத கட்டடத்தை சட்ட விரோதமாக கட்டியவருக்கே நீண்டநாள் குத்தகை அடிப்படையில் வ ழங்குமுகமாக நேற்றயதினம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி(ஈ.பி.ஆர்.எல்.எப்.), ஐக்கிய தேசிய கட்சி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி . ஈழமக்கள் ஜனநாயக் கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து தங்களது வரலாற்று கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதன்மூலம் இனிவரும் காலங்களில் யார் வேண்டுமானாலும் எந்த மாகாணத்தை சேர்ந்தவரும் வவுனியா நகரசபைக் காணியை அடாத்தாக பிடித்து நகரசபையின் எச்சரிக்கைகளையும் மீறி கட்டிடங்களை கட்டவும் அதனை பின்பு நீண்டநாள் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளவும் வழிசமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.??

குறித்த சட்டவிரோத கட்டிடத்தை கட்டிய நபர் அந்த கட்டிடத்தை நகரசபையினர் சீல் வைத்த போது அயலிலுள்ள வர்த்தகர்களிடம் இந்த கடையை நான் திறந்தே தீருவேன் என கூறியதுடன் நானா ? நகரசையா? என்று பார்த்துவிடுவோம் என்றும் கூறியதாக அயலிலுள்ள வர்த்தகர்கள் எமக்கு சில வாரங்களுக்கு முதலே கூறியிருந்த நிலையில் நகரசபைக்கும் அதன் சட்டத்திற்கும் – தனி மனிதனுக்கும் நடந்த அதிகார மோதலில் தனிநபர் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நகரசபையின் அதிகாரங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. நகரசபை எல்லைக்குள் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயர்ப்பாடுகளுக்கெல்லாம் இந்த நகரசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால் நகரசபையின் எதிர்காலம் என்னாவது? போன்ற கேள்விகள் மக்கள்மத்தியில் எழுந்துள்ளது.

அவர் பணத்தை செலவு செய்து கட்டடத்தை கட்டியுள்ளார் பாவம் அவருக்கு அந்த கடையை வழங்குவோம் என தீர்மானித்த நகரசபை நாளை பிறிதொருவர் பணத்தை செலவுசெய்து நகரசபை காணிக்குள் வீடொன்றினை அல்லது வர்த்தக நிலையமொன்றினை கட்டினால் என்ன செய்வார்கள் ????

உண்மையில் நகரசபை சரியாக நடப்பதாக இருந்தால் இந்த சட்டவிரோத கட்டிடத்தை கட்டியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், கட்டிடத்தை அரச சொத்தாக அதாவது நகரசபையின் சொத்தாக மாற்றியிருக்க வேண்டும். அல்லது கட்டிடத்தை அகற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு தவறான நடவடிக்கைக்கு மக்கள் பிரதிநிதிகள் துணை போயிருப்பது வேதனைக்குரியதே.

சபையில் இந்த முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமித் தேசிய மக்கள் முன்னணியும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 16 =

*