;
Athirady Tamil News

புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக நடிகர் விஜய் மீது குற்றம்சாட்டு..!!

0

புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக நடிகர் விஜய் மீது பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள சர்கார் படத்தின் போஸ்டர் அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. அதே நிலையில் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும் பெற்றுவருகிறது.

போஸ்டர் வெளியாகிய சிறிது நேரத்திலேயே அன்புமணி ராமதாஸ் இதற்கு எதிர்வினை ஆற்ற தொடங்கிவிட்டார். போஸ்டரை பதிவேற்றி, “சிகரெட் இல்லாமலே நீங்கள் ஸ்டைலாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டார். தொடர்ந்து, “விஜய் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைபிடிப்பதை ஊக்குவிப்பது வெட்கக்கேடானது” என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அழகிய தமிழ்மகன் படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சியில் நடித்ததற்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸும், பசுமைத் தாயக அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இனி இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் உறுதி கூறினார். அந்தச் செய்தி இடம் பெற்றுள்ள புகைப்படத்தையும் அன்புமணி தற்போது பதிவிட்டுள்ளார்.

திரைப்படங்களில் புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் அன்புமணி ராமதாஸ். ரஜினி நடித்த பாபா திரைப்படத்திற்கு பாமக வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து ரஜினி தான் நடிக்கும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை.

அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. இதற்கு மேற்சொன்னபடி பாமக எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து விஜய் பத்திரிகையாளரிடம், “மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன். என்னுடைய நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தேன். அதில், கெட்டவன் கதாபாத்திரமும் ஒன்று. அந்தக் கதாபாத்திரம் கெட்டவன் என்பதைக் காட்டுவதற்காகவே, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை இயக்குநர் வைத்தார். இறுதியில் அவன் திருந்துவதைக் காட்டுவதற்காகத்தான் சிகரெட்டைத் தூக்கி எறிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக் கூடத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அந்தப் பிரச்சினை அப்போதே முடிந்தாலும் விஜய் தனது படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை மட்டும் தொடர்ந்து வருகிறார். துப்பாக்கி படத்தின் போஸ்டரிலும் சுருட்டு பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்ப இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தக் காட்சியை நீக்கினார். விஜய் மீண்டும் “இனி என் படங்களில் புகைபிடிக்கும் காட்சி வராது” என்று கூறினார்.

ஆனால், அதன்பின் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியில் நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரிலும் அந்த நிலையே தொடர்கிறது. தனது வாக்குறுதியைத் தொடர்ந்து தானே மீறி வருவது விஜய் போன்ற முன்னணி நடிகருக்கு அழகல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் சிகரெட்டை வித்தியாசமாகப் பிடித்து திரைத் துறைக்குள் தனக்கான இடத்தை உறுதி செய்தவர் ரஜினிகாந்த். ஆனால், அவரே இதன் விளைவுகள் கருதி ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக ரஜினிகாந்த் நிகழ்த்திய சாதனைகளை முறியடிக்கும் நடிகராகத் திகழ்பவர் விஜய். அந்தளவில் இந்த விஷயத்திலும் விஜய் ரஜினியைப் பின்பற்ற வேண்டும் என்பதே பல தரப்பிலிருந்தும் வரும் கருத்தாக இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*