பெருந்தோட்டக் காணியில் அதிரடிப்படை முகாம்: மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

தெல்பெத்த தோட்டத்தின் மலங்காமை, தோட்டப்பிரிவில் ஏழு ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்க முற்படுவதை ஆட்சேபித்து, தெல்பெத்த தோட்டத்தின் ஏழு பிரிவுகளை, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அடையாள வீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் (24) ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி, தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தெல்பெத்தை, மொரகொல்ல, தெல்பெத்த மேற்பிரிவு மற்றும் கீழ்பிரிவு, கெந்தகொல்ல, கோபோ ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தொழிலாளர்களது வீடமைப்புத் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த குறித்த ஏழு ஏக்கர் காணியைச் சுவீகரித்து, அந்த இடத்தில் விசேட அதிரடிப்படை முகாம் ஒன்றை அமைக்க, அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், பதுளை மாநகரில் குவியும் குப்பைகளை, குறித்த காணியில் கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. எனினும், மக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து, அத்திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இக்காணியில் விசேட அதிரடிப்படை முகாமை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டம், மக்களின் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டது எனினும் மீண்டும் முகாமொன்றை அமைக்கும் முனைப்பில் அரசாங்கம் செயற்படுகிறது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயலும் பட்சத்தில், பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டத்தொழிலாளர்களும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.