;
Athirady Tamil News

இலங்கையிலேயே முதன்முறையாக சிறப்பு சேர்த்த விழாக் கோலம்: யாழின் நுழைவாயிலில்..!! (படங்கள் & வீடியோ)

0

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனின் பெருமுயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள சிவபூமி-திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(25) சிறப்பாக நடைபெற்றது.

தவில்,நாதஸ்வர முழக்கங்களுடன், அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கப் பிரதான கும்பம் உள்ளிட்ட கும்பங்கள் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுத் திருவாசக அரண்மணையின் முன்பாகக் காட்சி தரும் விநாயகப் பெருமான், கருங்கற்தேரில் காட்சி தரும் சிவலிங்கப் பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு கும்பங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவதெட்சணா மூர்த்தி கோயிலின் ஐந்தடுக்கு விமானத்தின் கலசத்திற்குக் கும்பங்களால் அபிஷேகம் நடாத்தப்பட்டது.

தொடர்ந்து அந்தண சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-10.30 மணியளவில் சிவதெட்சணா மூர்த்திக்கு கும்பாபிஷேகம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இரு மருங்கிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கும் மணி ஓசை எழுப்பக் கும்ப அபிஷேகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகக் கிரியைகளை சித்தன்கேணி வீணாகான குருபீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ சபா . வாசுதேவக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். மகா கும்பாபிஷேகப் பெருவிழா நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் இடம்பெற்றது.

மகா கும்பாபிஷேகத்தைப் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கண்டு இன்புற்றதுடன் பிரதான கும்பத் தீர்த்த நீரைப் பெற்றுக் கொள்வதற்காகப் பக்தர்கள் முண்டியடித்தமையையும் காண முடிந்தது.

இறுதியில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்தி வைத்த சிவஸ்ரீ சபா . வாசுதேவக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கெளரவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சிவாச்சாரியார்களிடமிருந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகங்களைத் தீர்க்கும் வகையில் பானங்கள் பரிமாறப்பட்டதுடன் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இலங்கையிலேயே முதன்முறையாக சிவதெட்சணா மூர்த்திக்கெனத் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் இதுவென்பதுடன் தெற்குத் திசை நோக்கி வீற்றிருப்பதும் சிறப்பம்சமாகும். சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இன்றைய தினம் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்கள் 108 சிவலிங்கங்களையும் தங்கள் கைகளால் தொட்டு வழிபடுவதற்கு ச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இதேவேளை,சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டுச் சிவபூமி திருவாசக அரண்மனையைச் சூழவுள்ள பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. குறிப்பாகச் சைவசமயத்தின் அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான நந்திக்கொடிகள் ஏ-09 பிரதான வீதியில் கம்பீரமாகப் பறந்த காட்சி மீண்டும் சைவசமயம் யாழ்.மண்ணில் தழைத்தோங்குவதைப் பறைசாற்றுவதாய் அமைந்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 19 =

*