;
Athirady Tamil News

வங்கி மோசடியின் போஸ்ட்டர் பாய் ஆக்கப்பட்டேன் – விஜய் மல்லையா புலம்பல்..!!

0

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசியல்வாதிகளால் வங்கி மோசடியின் போஸ்ட்டர் பாய் ஆக்கப்பட்ட நான் மக்களின் கோபத்துக்கும் இடிதாங்கியாக மாற்றப்பட்டுள்ளேன் என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள்வரை மவுனம் காத்துவந்த விஜய் மல்லையா முதன்முறையாக ஒரு அறிக்கையின் மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

எனது நிலைமை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரியிடம் நேரம் கேட்டி கடிதங்கள் அனுப்பி இருந்தேன். ஆனால், அவர்கள் இருவரும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், கிங் பிஷர் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 9 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை நான் திருடிக்கொண்டு ஓடிவிட்டதைப்போல் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் என்மீது ஒருசேர குற்றம்சாட்டி வருகின்றன.

கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் எனது குழுமம் மற்றும் எனது குடும்பத்தாருக்கு சொந்தமான குழுமங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

நான் பெற்ற அனைத்து கடன்களும் உரிய அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் வழங்கப்பட்டது. இறுதியாக, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் அனைத்து கடன்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே கணக்காக கடந்த 2010-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல் இல்லாமல் ஸ்டேட் பாங்க் தலைமையிலான 17 வங்கி அமைப்புகளிடம் இருந்து நான் வாங்கிய அசல் கடன் தொகை சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே. இதற்காக அடகு வைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் மற்றும் விற்பனை செய்ததன் மூலம் 600 கோடி ரூபாயும், கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகை 1280 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 29-3-2016 மற்றும் 6-4-2016 அன்று சுப்ரீம் கோர்ட்டில் நான் தெரிவித்த இரு கடன் சமரசங்களை வங்கிகள் நிராகரித்து விட்டன.

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து நான் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்த முன்னரும் தற்போதும் நான் நல்லெண்ணத்துடன் முயற்சித்து வருகிறேன். ஆனால், அரசியல் நோக்கம் கொண்ட சக்திகள் இவ்விகாரத்தில் தலையிட்டால் என்னால் வேறு எதுவும் செய்ய இயலாது.

இருப்பினும், வங்கி மோசடியின் ஒரே அடையாளமாக நான் ‘போஸ்ட்டர் பாய்’ ஆகவும் மக்களின் கோபத்துக்கு இடிதாங்கியாகவும் மாற்றப்பட்டுள்ளேன் என தனது அறிக்கையில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*