;
Athirady Tamil News

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு ஜூலை 4-வது வாரம் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி. தகவல்..!!

0

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான முடிவுகளை படிப்படியாக விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தேர்வாணையத்தின் புது முயற்சியாக, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிலுவையில் உள்ள போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடும் உத்தேச கால அட்டவணையை தேர்வாணையம் அதன் இணையதளத்தில் கடந்த 4-ந்தேதி வெளியிட்டது.

மேற்படி தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை, விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வாணையம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 14-ந்தேதி 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 4-வது வாரம் வெளியிடப்படும் என்று அரசு தேர்வாணையத்தின் உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 85 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட்டது. அதன் முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

மேலும் சில தேர்வு முடிவுகள் வெளியிடும் மாதம் உத்தேசமாக வெளியிடப்பட்டு உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*