;
Athirady Tamil News

ஹாட்ரிக் வெற்றி யாருக்கு…. இங்கிலாந்துடன் மோதுகிறது பெல்ஜியம்..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஜி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் சந்திக்கின்றன. ஏற்கனவே நாக் அவுட் தகுதிபெற்றுள்ள இந்த அணிகளில் யார் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்திக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதுகின்றன. வெற்றியுடன் துவங்கியது ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் இரண்டு ஆட்டங்களிலும் வென்றுள்ளன. யாருக்கு முதலிடம் தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன.

துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகின்றன. முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்பது இங்கிலாந்து, பெல்ஜியம் ஆட்டத்தில் தெரியவரும். யாருக்கு சாதகம் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, 1966ல் கோப்பையை வென்றது. அதன்பிறகு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த உலகக் கோப்பையில் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. 11வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம் கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்தது.

உலகக் கோப்பையில் இதுவரை இரு அணிகளும் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் இங்கிலாந்து வென்றது. மற்றொன்று டிராவானது. ஹாட்ரிக் வெற்றி இந்த உலகக் கோப்பையில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் உருகுவே மற்றும் குரேஷியா மட்டுமே 3 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளன. அந்த வாய்ப்பு தற்போது இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்துக்கு கிடைத்துள்ளது. இதில் யார் அந்த சாதனையைப் புரியப் போகிறார்கள் என்று இன்று ஆட்டத்தில் தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*