;
Athirady Tamil News

40 வருஷமாச்சு…. இன்னிக்காவது ஜெயிப்போமா…. பனாமாவை சந்திக்கும் துனீஷியா ஏக்கம்..!!

0

ஃபிபா உலகக் கோப்பையில் இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஜி பிரிவு ஆட்டத்தில் துனீஷியா, பனாமா சந்திக்கின்றன. ஏற்கெனவே பிரிவுச் சுற்றுடன் இரு அணிகளும் வெளியேறுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரசியம் ஏதும் இருக்காது. இருந்தாலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை துனீஷியா எதிர்பார்க்கிறது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதுகின்றன.

அதிக கோல்கள் ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது. துனீஷியா, பனாமா வெளியேறியது தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன. துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகின்றன. முதலிடம் யாருக்கு இன்று நடக்கும் இங்கிலாந்து, பெல்ஜியம் ஆட்டத்தின் முடிவில் தான், புள்ளிப் பட்டியலில் யார் முதலிடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும்.

அதேபோல், யாருக்கு கடைசி இடம் என்பது துனீஷியா, பனாமா ஆட்டத்தில் தெரியவரும். 40 ஆண்டுக்குப் பிறகு வெற்றி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பனாமா, முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்று இன்று விளையாடும். அதே நேரத்தில் துனீஷியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா வென்றது. அதன்பிறகு விளையாடிய 13 ஆட்டங்களில் 9 தோல்வி, 4 டிரா செய்துள்ளது. வெற்றியுடன் இந்த உலகக் கோப்பையில் இருந்து வெளியேற இரு அணிகளும் முயற்சிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − thirteen =

*