;
Athirady Tamil News

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை காட்டும் பாரதிய ஜனதா..!!

0

கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க-104, காங்கிரஸ்-80, மதச்சார் பற்ற ஜனதா தளம்-37 இடங்களில் வெற்றிபெற்றன.

ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா பதவி விலகினார். இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதல்- மந்திரியாக பதவியேற்றார்.

ஆனால் மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வது வரை கொள்கை முடிவுகளை எடுப்பது வரை அனைத்து வி‌ஷயங்களிலும் காங்கிரசுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டு குமாரசாமிக்கு இடையூறு கொடுத்து வருகிறார்.

சித்தராமையா கொடுத்து வரும் தொல்லை காரணமாக குமாரசாமி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரசிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலும் சில எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பதவி மற்றும் உரிய அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் அணி மாறலாமா? என்ற மனநிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வலைவீசி பிடிக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் மந்திரி பதவி உள்பட எத்தகைய அங்கீகாரம் வேண்டுமோ அவை அனைத்தும் செய்து தரப்படும் என்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா தரப்பில் இருந்து ஆசை காட்டப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவு எம்.எல். ஏ.க்களை இழுக்கவும் பா.ஜ.க.வினர் காய்களை நகர்த்தி வருகிறார்கள். சித்தராமையா மூலம் எம்.எல்.ஏ. ஆகி உள்ள சிலர் குமாரசாமி மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அவர்களிடம் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு, நீங்கள் விரும்பும் ஆட்சியை தர நாங்கள் தயாராக உள்ளோம் என்று பேச்சு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ள எடியூரப்பா, நேற்று பெங்களூரில் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பரபரப்பான சில தகவல்களை வெளியிட்டார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க.வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வருவதற்கு நம் கட்சி தலைவர்கள் உதவ வேண்டும். மாற்று கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வீட்டுக்கே நீங்கள் நேரில் சென்று சமரச பேச்சு நடத்த வேண்டும்.

பா.ஜ.க.வில் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதை நீங்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மிக விரைவில் இதற்கு பலன் கிடைக்கும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களை இழுக்க எடியூரப்பா வெளிப்படையாக பேசி இருப்பது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா முயற்சிகளை மறுத்த சித்தராமையா, எனது ஆதரவாளர்கள் யாரும் பா.ஜ.க. பக்கம் சாயமாட்டார்கள். குமாரசாமி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 2 =

*