;
Athirady Tamil News

பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்தின் சொத்துகள் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு தமிழ் வித்தியாலயத்திற்குள் நேற்று மாலை அத்துமீறிச்சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களின் இருக்கைகள் மற்றும் ஆவணங்களை எரியூட்டியுள்ளதுடன் மேசைகளில் மலம் கழித்தும் சென்றுள்ளனர்.

பின்தங்கிய பாடசாலையான இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக அமைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் செயற்பாட்டு பொருட்களும் கிழித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் இப்பகுதியில் மாணவர்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் கற்பித்தில்செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் இவ்வாறான நிலை காரணமாக பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் அச்சநிலையேற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமக்கு வசதியில்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்பமுடியாமல் இவ்வாறான பாடசாலைகளில் அனுமதிப்பதாகவும் ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கவலையடையச்செய்வதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி திஹகவத்துற, மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவுபொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் வருகைதந்து பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு குறித்த பாடசாலைக்கு இரவு நேர காவலாளி ஒருவரை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அங்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*