;
Athirady Tamil News

8 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட யா/ மண்டைதீவு றோ.க. வித்தியாலய புதிய கட்டட திறப்பு விழா..!! (படங்கள்)

0

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து 8 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட போரினால் சிதைவடைந்த யா/ மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா 02.07.2018 அன்று காலை 8.30 மணியளவில் தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு – அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிற் அடிகளாரின் ஆசியுரையுடன், பாடசாலை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு நன்றித் திருப்பலியைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மாலை அணிவித்து, மாணவர்களின் பாண்ட வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, தேசியக் கொடியினை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் S. சத்தியசீலன் அவர்களும், வடக்கு மாகாணசபைக் கொடியினை கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ க. சர்வேஸ்வரன் அவர்களும், பாடசாலைக் கொடியினை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தின் பெயர்பலகையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சங்கர் பாலச்சந்திரன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்து, பாடசாலையின் அதிபர் அலுவலகத்தினையும் நாடாவை வெட்டி திறந்து வைக்க, தொடர்ந்து வகுப்பறைகளை கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ க. சர்வேஸ்வரன், யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் மற்றும் வடக்கு மாகாண மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. உதயகுமார் ஆகியோரும் நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றனர்.

இந்நிகழ்வில் தீவக வலய வலயக் கல்வி பணிப்பாளர் திரு. ஆ.இளங்கோவன் மற்றும் தீவக வலய பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*