;
Athirady Tamil News

சேலம் அருகே 5 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் சிக்கியது எப்படி?..!!

0

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இளம்பிள்ளை இடங்கணசாலை புதுரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 40). தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 4 முறை திருமணம் நடந்துள்ளது. எந்த பெண்ணுடனும் வாழாமல் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பூபதி, வேலை தொடர்பாக சங்ககிரிக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது சங்ககிரி பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவரிடம் எனக்கு திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்டார். குழந்தை ஏதும் இல்லை. பெண் இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

தங்கவேலுக்கு கிருஷ்ணவேணி (38) என்ற மகள் உள்ளார். கிருஷ்ணவேணிக்கும், ஓமலூர் டேனிஸ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகனுக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தனுசு (12) என்ற மகன் இருந்தான். இந்தநிலையில் அவரது கணவரும், மகனும் இறந்து விட்டனர். இதனால் கிருஷ்ணவேணி சங்ககிரி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதை அறிந்த பூபதி, தங்கவேல் வீட்டுக்கு சென்று, கிருஷ்ணவேணியை பெண் கேட்டார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்கவேல் மறுத்தார். எனினும் பூபதி எனது தாய், தந்தைக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். இதனால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் எனக்கூறினார்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணவேணி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதன்பின்னர் கடந்த கடந்த மே மாதம் சேலம் ஊத்துமலையில் உள்ள ஒரு கோவிலில் பூபதிக்கும், கிருஷ்ணவேணிக்கும் திருமணம் நடந்தது.

தொடர்ந்து இடங்கணசாலை புதுரெட்டியூர் சென்று கூட்டுக்குடும்பமாக கிருஷ்ணவேணியுடன் பூபதி வசித்து வந்தார். திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு பூபதி, தனது மனைவியிடம், உனது முதல் கணவர் போட்ட 10½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை விவசாயம் செய்யவும், குடும்ப செலவுக்காகவும் தருமாறு கேட்டு வாங்கி கொண்டார். இதனிடையே பூபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் பூபதி குறித்து கிருஷ்ணவேணி விசாரித்தார். அப்போது ஏற்கனவே அவருக்கு 4 பெண்களுடன் திருமணமானதும், அவர்களுடன் வாழாமல் துரத்தி விட்டதும் தெரியவந்தது. இது குறித்து தனது கணவர் பூபதி மற்றும் மாமனார் கோவிந்தசாமி, மாமியார் சிங்காரி ஆகியோரிடம் ஏற்கனவே 4 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து என்னை ஏமாற்றி 5-வதாக திருமணம் செய்து கொண்டு உள்ளீர்கள் என கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணவேணியை வீட்டில் அடைத்து வைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த நிலையில் அங்கிருந்து தப்பித்த கிருஷ்ணவேணி சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோவிந்தசாமி, சிங்காரி ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இது போல வேறு பெண்களையும் ஏமாற்றி பூபதி திருமணம் செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + three =

*