;
Athirady Tamil News

லதா ரஜினிகாந்தை எச்சரித்த உச்ச நீதிமன்றம்..!!

0

லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்கு வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் விசாரணையைச் சந்திக்க வேண்டிவரும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் இணைந்து நடித்த ‘கோச்சடையான்’ அனிமேஷன் திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக ‘மீடியா ஒன் குளோபல்’ நிறுவனம் சார்பில் லதா ரஜினிகாந்த், ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 1.5 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதியுள்ள 8.5 கோடி ரூபாயைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் ஆட் பீரோ தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர், லதா ரஜினிகாந்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஆட் பீரோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 12 வாரங்களில் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 3 மாதங்களுக்குள் மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால், இப்போதுவரை பணம் செலுத்தப்படவில்லை. (ஜூலை 3) இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. “நீதிமன்ற உத்தரவுகளை விளையாட்டு மைதானமாகக் கருதி விளையாடுவதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் விசாரணையைச் சந்திக்க வேண்டிவரும். குற்றமற்றவர் என்றால் விடுவிக்கப்படுவீர்கள். விசாரணையைச் சந்தியுங்கள்” என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nine =

*